‘இதுவரை பார்த்தவர்கள் 7 கோடி பேர்!’.. லேப்டாப்பில் சிக்கிய மேலும் பல வீடியோக்கள்!.. ‘பெண்களுக்கு எதிரான ஆபாச கேள்விகள்’ .. ‘என்ன தண்டனை கிடைக்கும்?’
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் இளம் பெண்களிடம் ஆபாசமாக பேட்டி எடுக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையின் பிரபல யூடியூப் சேனல்களுல் ஒன்றான சென்னை டாக்ஸ் யூடியூப் சேனலில் பெண்களிடத்தில் ஆபாசமாக பேசி வீடியோ எடுத்து வெளியிட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாக பேசி வீடியோ எடுக்க முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் 23 வயதான ஆசன் பாட்ஷா, கேமராமேன் அஜய் பாபு (24) மற்றும் யூடியூப் சேனல் உரிமையாளர் தினேஷ் (31) ஆகியோர் தனிப்படை போலீசார் கைது செய்யப்பட்டனர். அதன்பின்னர் போரூரில் இருக்கும் சென்னை டாக்ஸ் யூடியூப் சேனல் நிறுவனத்தில் போலீஸார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இளம்பெண்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்தது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய சோதனையின்போது இவர்களிடம் இருந்து பெண்களுக்கு எதிரான ஆபாச வீடியோக்கள் அடங்கிய கணினி மற்றும் லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனால் அந்த சேனல் நிறுவனத்தை போலீசார் மூடி சீல் வைத்திருக்கின்றனர். இதுவரை 200 வீடியோக்கள் சென்னை டாக்ஸ் சேனலில் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுவரை இவற்றை ஏழு கோடி பார்வையாளர்கள் பார்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது தமிழக மக்கள் தொகைக்கு சமமான எண்ணிக்கைதான் இது.
ஒரு வீடியோவை பத்து லட்சம் பேர் பார்த்தால் தலா ரூபாய் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை வருமானம் யூடியூப் சேனலில் இருந்து கிடைக்கும் என்று கூறப்படுகிறது. விளம்பர வருமானம் இது இல்லாமல் தனியாக கிடைக்கும். இந்த நிலையில் இப்போது வரை சென்னை டாக்ஸ் சேனல் முடக்கப்படவில்லை என்றும் முடக்குவதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சாஸ்திரிநகர் போலீசார் கைதானவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 294 - ஆபாசமாக பேசுதல், பிரிவு 354 - பெண்களை தொடர்ந்து தொந்தரவு செய்தல், பிரிவு 509 - பெண்ணை பொது இடங்களில் அவமானப்படுத்தும் வகையில் கேள்வி கேட்டல், பிரிவு 506 - மிரட்டுதல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் என 5 வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப் பிரிவுகளின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் இவர்களுக்கான தண்டனை கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் 3 பேருக்கும் 7 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்