'என்னோட சளி, காய்ச்சல் மத்தவங்களுக்கு பரவிருச்சுனா!?'... 'அதனால'... கொரோனா குறித்த அரசாங்கத்தின் சுற்றறிக்கையை... தந்திரமாக பயன்படுத்திய மாணவன்... தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தால் சென்னையில் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவர் ஒருவர் தனக்கு சளி, இருமல் அறிகுறி இருப்பதால் நீண்ட விடுப்பு தரும்படி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு செய்திகள் இணையத்தில் உலா வரும் நிலையில், முகலிவாக்கத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் தனக்கு சளி, இருமல் அறிகுறி இருப்பதால் நீண்ட விடுப்பு தரும்படி தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
அந்த விடுப்பு விண்ணப்பத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு மாணவன் எழுதியிருப்பதாவது:-
நான் தங்கள் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறேன். தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அது எளிதில் பரவக்கூடிய வைரஸ். எனக்கு சளி, காய்ச்சல் அறிகுறி தெரிகிறது. எனவே மற்ற மாணவர்கள் நலன் கருதி எனக்கு நீண்ட விடுப்பு (மெடிக்கல் லீவு) தர வேண்டும்.
இதுபற்றி அரசாங்கமும் சுற்றறிக்கை செய்துள்ளது. சளி, காய்ச்சல், அறிகுறி உள்ள மாணவர்கள் வர வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் நான் மற்ற மாணவர்களின் நலன் கருதி நீண்ட விடுப்பு எடுக்கிறேன். எனது விடுப்பு நாட்களை வருகை நாளாக பதிவு செய்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் எழுதி உள்ளார்.
மாணவனின் இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த மாணவரை அழைத்து விசாரித்தார். அப்போது விளையாட்டாக விடுமுறை விண்ணப்ப கடிதம் எழுதியதாக தெரிவித்தார். அந்த கடிதத்தை செல்போனில் படம் எடுத்து மற்ற மாணவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு விட்டதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவரை தலைமை ஆசிரியர் கண்டித்து அறிவுரை கூறினார். மேலும் அவரது பெற்றோரையும் அழைத்து மாணவனின் செயல் குறித்து தெரிவித்தார்.