'அப்பாவோட ட்ரீட்மெண்ட்க்கு காசு இல்ல'...'பெண்ணின் மாஸ்டர் பிளான்'...சென்னையில் நடந்த மோசடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வருவோரிடம் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு நகரின் பல பகுதிகளில் இருந்தும் சிகிச்சைக்காக பலர் வருவது வழக்கம். இதனால் மருத்துவமனை எப்போதும் பிஸியாகவே காணப்படும். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் 22 வயது நிரம்பிய பெண் ஒருவர் தனது தந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறியுள்ளார். மேலும் சிகிச்சைக்கு போதுமான பணம் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதனால் தான் வைத்திருக்கும் தங்க நாணயத்தை வைத்துக் கொண்டு ரூ. 500 மட்டும் கொடுத்து உதவுங்கள் என கூறியுள்ளார். இளம் வயது பெண் தந்தையை வைத்து கொண்டு இவ்வாறு கஷ்டப்படுகிறாளே என இரக்கம் கொண்ட சிலர், அந்த பெண் கொடுத்த தங்க நாணயத்தை வாங்கி கொண்டு ரூ.500 கொடுத்துள்ளார்கள். இதனிடையே வீட்டிற்கு சென்று தங்க நாணயத்தை பரிசோதனை செய்தபோது அது கவரிங் என தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக வண்ணாரப்பேட்டை காவல் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர், அங்கு சுற்றி கொண்டிருந்த இளம் பெண்ணை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த பெண்ணின் பெயர் ப்ரியா என்பதும், அவர் ஈரோடு மாவட்டம் குமார பாளையத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. ப்ரியாவிடம் நடந்த விசாரணையில், அவர் மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தது காவல்துறைக்குத் தெரியவந்துள்ளது.
குறிப்பாக மூதாட்டி ஒருவரிடம் பேச்சுக் கொடுத்துத் தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.மேலும் அந்த பெண்ணிடம் இருந்து 3 சவரன் தங்க நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள். நோயாளிகளை பார்க்க வருபவர்களிடம் இளம் பெண் மோசடியில் ஈடுபட்ட சம்பவம், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.