'இன்னைக்கு கல்யாண நாள்...' 'ஆசிர்வாதம் பண்ணுங்க...' 'பல நாளா போட்ட ஸ்கெட்ச்...' - இப்படி ஒரு 'துரோகத்த பண்ணுவாங்க'னு கனவுல கூட நெனைக்கல...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் சேர்ந்த கும்பல் சென்னையை சேர்ந்த முதியவரை அன்பாக பேசி அவரிடமிருந்த லட்சக்கணக்கான பணம் மற்றும் வைர மூக்குத்தியை கொள்ளையடித்துள்ளனர்.
சென்னை புழுதிவாக்கம் பாலாஜி நகர் 36-வது தெருவில் வசித்து வருகிறார் 75 வயதான சாமிநாதன். இவரின் மனைவி 40 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்று சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தனியாக காலம் தள்ளிவரும் சாமிநாதன் அவர்களின் வீட்டருகே கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தினேஷ், ஐசக், பிரபு என்கிற அப்புக்குட்டி மற்றும் நூர்சபா என்ற பெண்ணும் குடிவந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் அப்பகுதிக்கு குடிவந்ததிலிருந்தே சாமிநாதனிடம் மிகவும் அன்பாகப் பழகி வந்தனர். ஒருவருக்கொருவர் உறவினர் போல பழகியதால் சாமிநாதன் அவரின் குடும்ப சூழல் மற்றும் ஓய்வூதிய விவரங்கள், நான் சேமித்து வைத்திருக்கும் பணம் குறித்து ஒளிவு மறைவின்றி அனைத்தையும் கூறியுள்ளார். அதன்பின் தான் இந்த நால்வரின் உண்மையான முகம் தெரியவந்துள்ளது.
2021 ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி சாமிநாதன் வீட்டிற்கு வந்த தினேஷ், நூர்சபா, 'எங்களுக்கு திருமண நாள். நீங்கள் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும்' எனக் கூறி சாமிநாதன் அவர்களிடம் ஆசி பெற்றதோடு, அவரை இரவு உணவிற்காக தாம்பரம் அழைத்து சென்றுள்ளனர்.
இரவு அங்கேயே தங்கிய சாமிநாதனிடம் நுர்சபா மற்றும் தினேஷ், 'தாங்கள் மரம் அறுக்கும் வேலை செய்து வருவதாகவும் அதில் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் கொடுத்து உதவ வேண்டும்' எனக் கேட்டுள்ளனர். ஆனால், சாமிநாதன் பணம் தர மறுக்கவே அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி வீட்டு அறைக்குள் பூட்டி வைத்து அவரின் வீட்டு சாவியை பிடுங்கி அனைவரும் கிளம்பி புழுதிவாக்கம் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த தப்பித்த சாமிநாதன் ஆட்டோ மூலம் புழுதிவாக்கத்தில் உள்ள தனது தம்பி வீட்டுக்குச் சென்று விவரத்தைக் கூறி, அவரையும் அழைத்துக் கொண்டு தம்பியை அழைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றபோது வீட்டிலிருந்த 7,53,000 ரூபாய், வைத்திருந்த வைர மூக்குத்தியையும் காணவில்லை.
அதன்பின் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்த சாமிநாதன் அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி விசாரணை நடத்திய மடிப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் மற்றும் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்தபோது அந்தத் கும்பலைச் சேர்ந்தவர்களின் செல்போன் சிக்னல் பெங்களூருவில் இருப்பதாகக் காட்டியது.
அதன்பின் மடிப்பாக்கம் போலீஸார் பெங்களுருவுக்குச் சென்றதில் அங்கிருந்த தினேஷ் என்கிற குரு (29), அவரின் மனைவி நூர்சபா (23). ஐசக் (31), காஞ்சிபுரம் மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பிரபு என்கிற அப்பு குட்டி (24) ஆகிய 4 பேரை போலீஸார் மடக்கிப்பிடித்தனர். அவர்களிடமிருந்து 5,.60,000 ரூபாய் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து கூறிய காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்திருப்பதாக தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இதற்கு முன்னரே ஐசக் மீது விபசார தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்