‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் கிணற்றுக்குள் விழுந்து இளம்பெண் உயிரிழந்த அன்று என்ன நடந்தது என்பதை உயிர் பிழைத்த இளைஞர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

‘செல்ஃபி காரணமல்ல’.. ‘அவளுக்காகத்தான் கிணற்றில் இறங்கினேன்’.. ‘காதலி மரணத்தால் கலங்கித் துடிக்கும் இளைஞர்’..

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் நவஜீவன் நகரில் வசித்து வருபவர் அப்பு (24). கடந்த அக்டோபர் 2ஆம் தேதி அவருக்கும், அவருடைய உறவுக்காரப் பெண்ணான மெர்சிக்கும் (21) பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இருவரும் பைக்கில் வெளியே சென்றபோது வழியில் இருந்த ஒரு கிணற்றுக்குள் இறங்கியுள்ளனர். அப்போது இருவரும் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் மெர்சி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று என்ன நடந்தது என்பதை பிரபல செய்தி ஊடகம் ஒன்றிடம் அப்பு கண்ணீருடன் தெரிவித்துள்ளார். மெர்சி இறந்ததை தாங்க முடியாமல் துக்கத்துடன் பேசிய அவர், “நிச்சயத்துக்குப் பிறகு என்னிடம் உரிமையாக பழகி வந்த மெர்சி கடந்த 4 ஆம் தேதி என்னுடைய வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது அவள் வெளியே செல்லலாம் எனக் கூறியதால் பைக்கில் அவளை அழைத்துக்கொண்டு வெளியே சென்றேன். நெமிலிச்சேரி பைபாஸ் அருகே சென்றுகொண்டிருந்தபோது மெர்சி அங்கிருந்த வயலில் நாம் ஃபோட்டோ எடுக்கலாம் என்றாள்.

அதனால் இருவரும் கண்டிகை பகுதியில் உள்ள வயலுக்குச் சென்றோம். அங்கு இருந்த விவசாயக் கிணற்றைப் பார்த்த மெர்சி உள்ளே இறங்கி தண்ணீரைக் காலால் தொடுவோம் என்றாள். உடனே நான் எனக்கு நீச்சல் அவ்வளவாகத் தெரியாது வேண்டாம் என்றேன். அதற்கு மெர்சி, “இந்தக் காலத்தில் லவ்வருக்காக எதையும் செய்கிறார்கள். நீ என்னுடைய ஆசைக்காக கிணற்றில் இறங்க மாட்டாயா? எனக் கேட்டாள்.

பின்னர் அவளுக்காகத்தான் நான் கிணற்றில் இறங்கினேன். நான் 5வது படி வரை இறங்கியதும் என்னைப் பார்த்து சிரித்தபடியே 4வது படியில் மெர்சி காலை வைத்தாள். அப்போது கால் தவறியதில் அவள் என் மீது தடுமாறி விழ, அவளைப் பிடிக்க முயன்றதில் இருவரும் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீருக்குள் மூழ்கினோம். கிணற்றின் அடி ஆழம் வரை சென்ற நான் தண்ணீருக்குள் மெர்சியை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

பின் தண்ணீருக்கு மேலே வந்த நான் காப்பாற்றுங்கள் என கத்தியதைக் கேட்டு வந்த ஒரு தாத்தா அருகிலிருந்த டியூப் ஒன்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார். மேலே வந்த நான் மெர்சியும் கிணற்றுக்குள் விழுந்ததைக் கூற அவர் தனக்கும் நீச்சல் தெரியாது எனக் கூறினார். அதற்குள் நான் மயங்கிவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.

அதன்பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அப்புவுக்கு 5ஆம் தேதி தான் மெர்சி இறந்தது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பேசிய அப்பு, மெர்சி ஆகியோரின் குடும்ப நண்பர் ஒருவர், “சம்பவத்தன்று செல்ஃபி எடுக்க முயன்றதில் மெர்சி தவறி விழவில்லை. மழையின் காரணமாக கிணற்றின் படியில் இருந்த பாசி வழுக்கியதிலேயே இந்த விபரீதம் நடந்துள்ளது” எனக் கூறியுள்ளார்.

CHENNAI, COUPLE, SELFIE, WELL, DEAD, GIRL, LOVER, MARRIAGE