'அந்த மனசுதான் சார் கடவுள்'- சென்னை மழையில் சிக்கிய ஆம்புலன்ஸ்... 4 கிமீ நடந்து பேங்க் மேனேஜர் செய்த காரியம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பெய்து வரும் கன மழையினால் நகர் முழுவதும் கடுமையான வாகன நெரிசல் நிலவுகிறது. இந்த வாகன நெரிசலில் சிக்கித் தவித்த ஆம்புலன்ஸ்-க்கு வங்கி மேலாளர் வழி ஏற்படுத்திக் கொடுத்த விதம் பார்ப்பவர்களை நெகிழ வைக்கும்படி இருந்தது.
சென்னையில் நேற்று திடீரென கனமழை பெய்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கனமழை வெளுத்து வாங்கியதால் சென்னையில் பல இடங்கள் வெள்ளக் காடாகக் காட்சி அளித்தன. நகரின் முக்கிய சாலைகள் அனைத்திலும் வாகன நெரிசல் கட்டுக்கடங்காமல் இருந்தது. சென்னையில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் கடுமையான வாகன நெரிசல் பல மணி நேரங்களாக நீடித்திருந்தது.
அப்படி அண்ணா சாலையில் வாகன நெரிசலில் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அந்த வழியாக ஜின்னா என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பணி முடித்து வீடு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். இவர் தனியுஆர் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
ஆம்புலன்ஸ் வாகன நெரிசலில் சிக்கித் திணறுவதைப் பார்த்த ஜின்னா உடனடியாகத் தனது இரு சக்கர வாகனத்தை சாலை ஓரம் ஆக நிறுத்தினார். உடனடியாக சாலையில் மழையில் இறங்கி ஆம்புலன்ஸ்-க்கு பாதை ஏற்படுத்திக் கொடுத்தார். அதே இடத்தில் மேலும் 2 ஆம்புலன்ஸுகளும் இருந்துள்ளன.
அண்ணா சாலையில் நின்ற இடத்திலேயே உதவியதோடு மட்டும் இல்லாமல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை வரையில் சுமார் 4 கி.மீ நடந்தே சென்று உதவி உள்ளார். 4 கி.மீ நடந்து கொண்டே வாகனங்களை ஓரம் போகச் செய்து ஆம்புலன்ஸ்களை மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்துள்ளார் ஜின்னா.
கூடியிருந்தவர்கள் அனைவரும் ஜின்னாவுக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
மற்ற செய்திகள்