'கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்'... 'இந்த குரலை ஞாபகம் இருக்கா'?... சென்னையில் புது யுக்தியுடன் களமிறங்கியுள்ள மோசடி கும்பல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'சார், நான் பேங்க் மேனேஜர் பேசுறேன். கார்டு மேலே இருக்குற 16 நம்பர் சொல்லு சார்' என்று வட இந்தியக் கும்பல் ஒன்று, தனக்குத் தெரிந்த தமிழில் பேசி மோசடியில் ஈடுபட்டு வந்தது பலருக்கும் தெரிந்த ஒன்று. பொதுவாக இந்த அழைப்பு பலருக்கும் வந்திருக்கும். இதையடுத்து மக்கள் இந்த மோசடி கும்பல் குறித்து எச்சரிக்கையானதையடுத்து, தற்போது புதிய ரூட் எடுத்து மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
கிரெடிட் கார்டு என்பது தற்போது பரவலாக அனைவரும் உபயோகித்து வருகிறார்கள். இந்த கடன் அட்டை கொண்டு ஷாப்பிங் செய்தால் வாடிக்கையாளர்களுக்கு ரிவார்ட்ஸ் பாயிண்ட் எனப்படும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி சில சலுகைகள் பெறலாம். இதைத் தான் தற்போது தங்களின் மோசடிக்காக மோசடி கும்பல் கையில் எடுத்துள்ளது. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு வங்கி ஊழியர்கள் போல் பேசும் மோசடி கும்பல், கடன் அட்டைக்கான வெகுமதி புள்ளிகளைப் பணமாக்கி கணக்கில் செலுத்தப்படும் எனப் பேசி லட்சக்கணக்கில் கொள்ளையடித்து வருகின்றனர்.
சென்னையில் இந்த மோசடி கும்பலிடம் சிக்கிய பேராசிரியை தனது பணத்தை இழந்துள்ளார். போரூரைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை ஒருவரிடம் எஸ்.பி.ஐ வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவிலிருந்து பேசுவதாகத் தொடர்பு கொண்ட நபர், ரிவார்ட்ஸ் பாயிண்ட் எனும் வெகுமதி புள்ளிகளைப் பணமாக்கும் திட்டம் ஒன்று இருப்பதாகக் கூறியுள்ளார். முதலில் சந்தேகப்பட்ட அந்த பேராசிரியை, சில கேள்விகளை எழுப்பியுள்ளார். எதிர்முனையிலிருந்த நபர் பேராசிரியையின் வங்கிக் கணக்கு விவரங்கள், கிரெடிட் கார்டு விவரங்களைத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் வங்கி ஊழியர் தான் என அந்த பேராசிரியை நம்பியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து அந்த நபர் கேட்ட அனைத்து விவரங்களையும் பேராசிரியை தெரிவித்துள்ளார். இறுதியாக கிரெடிட் கார்டு வெகுமதி புள்ளிகளைப் பணமாக மாற்றி, அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என கூறியதை நம்பி, அவரது செல்போனிற்கு வந்த ஓ.டி.பி எண்ணை அந்த நபர் கேட்க அதையும் அவர் கூறியுள்ளார். ஓ.டி.பி எண்ணைச் சொன்ன அடுத்த நிமிடம் பேராசிரியையின் கிரெடிட் கார்டில் இருந்து ஒன்றரை லட்சம் பணம் துடைத்து எடுக்கப்பட்டது. இது தொடர்பாகச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் இது போன்ற மோசடி புகார்கள் ஆன்லைன் மூலம் வருவதாகத் தெரிவித்துள்ள வங்கி மோசடி தடுப்பு பிரிவு போலீசார், வங்கிக் கணக்கு தொடர்பான எந்த தகவலையும் வங்கி ஊழியர்கள் செல்போன் மூலம் கேட்பதில்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
மற்ற செய்திகள்