வருடத்திற்கு 28 லட்சம் சம்பளம் வாங்கிய வங்கி ஊழியர்.. ஆன்லைன் ரம்மியால் சிதைந்த குடும்பம்.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.75 லட்சம் பணத்தை இழந்ததால் அதனை தட்டிக்கேட்ட மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்துள்ளார். இதனைக் கண்ட தன்னுடைய இரு மகன்களை, தலையணை மற்றும் கழுத்து நெரித்து தனியார் வங்கி அதிகாரி ஒருவர் கொடூரமாக கொலை செய்துள்ளார்.
இந்த நடுங்க வைக்கும் கொடூரத்தை நிகழ்த்திவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெருங்குடி பகுதியில் இருக்கும் பெரியார் சாலையில் உள்ள 9 அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார் மணிகண்டன்(45 வயது). கோயம்புத்தூரை பூர்விகமாக கொண்ட இவருக்கு 11 வருடங்களுக்கு முன்பு பிரியா(40 வயது) என்பவருடன் திருமணம் நடந்தது.
பிரபல வங்கியில் பணி:
இந்த தம்பதியினருக்கு 10 வயதில் தரண் மற்றும் ஒரு வயதில் தாஹன் என்ற இரு மகன்கள் இருந்தனர். தரண் அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். மணிகண்டன் போரூரில் உள்ள லண்டனை தலைமையகமாக கொண்ட பிரபல வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். ஆண்டு வருமானமாக ரூ.28 லட்சம் சம்பளம் பெற்று வந்துள்ளார்.
மணிகண்டனுக்கு சூதாட்டத்தில் விருப்பம் உள்ளது. அடிக்கடி சூதாட்டத்தில் ஈடுபடுவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் மூலம் மணிகண்டன் லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். அதன் மீதான ஆசையில் மணிகண்டன் ஒரு கட்டத்தில் நண்பர்களிடம் தான் பெட்ரோல் நிலையம் அமைக்க போவதாகவும், அதற்கான பணிகள் முடிந்துவிட்டதாக கூறி ரூ.75 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.
ஆன்லைன் சூதாட்டம்:
இந்த விஷயம் மனைவிக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டம் மூலம் தான் வைத்திருந்த பணம் மற்றும் கடன் வாங்கிய ரூ.75 லட்சம் என ரூ. ஒரு கோடிக்கு மேல் இழந்துள்ளார். இதன் காரணமாக மனமுடைந்த மணிகண்டன் தனது மனைவிக்கு கூட நடந்த விஷயத்தை சொல்லாமல் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டன் மகன் தரண் உடன் தினமும் விளையாடும் சிறுவர்கள் தரணை தேடி அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். வெளியில் இருந்தப்படி தரணை அழைத்துள்ளனர். ஆனால், தரண் வெளியே வரவில்லை. இதனால் சிறுவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் தரண் வரவில்லை. வீடு திறந்து காணப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
கிரிக்கெட் பேட்டால் அடித்துக் கொலை:
சந்தேகமடைந்த தரண் நண்பர்களின் பெற்றோர் மணிகண்டன் வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளனர். அப்போது, மணிகண்டன் சமையல் அறையில் உள்ள கொக்கியில் தனது வேட்டியால் தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர். பெட்ரூமிற்கு சென்று பார்த்தபோது, மனைவி கொடூரமாக மண்டை உடைந்து அறை முழுவதும் ரத்தம் சிதறிய நிலையில் இறந்து கிடந்தார். அருகில் கிடந்த கிரிக்கெட் மட்டையில் ரத்தம் படிந்து இருந்தது. படுக்கை அறையில் மூத்த மகன் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். பிறந்து ஒரு வயதே ஆன மகன் கழுத்தில் பனியன் துணியால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.நிலைகுலைந்து போன அக்கம்பக்கத்தினர் குறித்து குடியிருப்பு வாசிகள் துரைப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
நண்பர்களிடம் ரூ.75 லட்சம் பணம் கடன்:
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வங்கி உதவி மேலாளர் மணிகண்டன், அவரது மனைவி மற்றும் 2 மகன்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், மனைவிக்கு தெரியாமல் மணிகண்டன் நண்பர்களிடம் ரூ.75 லட்சம் பணம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன்காரணமாக கடன் கொடுத்த மணிகண்டனின் நண்பர்கள் முந்தின நாள் காலையில் வீட்டிற்கு வீட்டிற்கு தேடி வந்து மணிகண்டனிடம் பணம் கேட்டுள்ளனர். நண்பர்கள் வந்த பிறகுதான், மனைவிக்கு மணிகண்டன் ரூ.75 லட்சம் கடன் வாங்கி ஆன்லைன் சூதாட்டத்தில் இழந்தது தெரிந்துள்ளது. பின்னர் கடன் கொடுத்த நண்பர்கள் சென்ற பின்பு கணவரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் கடுமையான சண்டை உருவானது.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மணிகண்டன் கோபத்தின் உச்சிக்கு சென்று மகன் விளையாடும் கிரிக்கெட் மட்டையை எடுத்து கடுமையாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் மனைவி சம்பவ இடத்திலேயே துடித்தபடி உயிரிழந்தார். இதை கண்ட மூத்த மகனை தலையணையால் அமுக்கி கொன்றுள்ளார்.
ஒரு மணி நேரம் அழுகை:
பிறந்து ஒரு வயதான இரண்டாவது மகன் தாஹனை பனியனை கழற்றி கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் ஆன்லைன் சூதாட்டத்தால் தனது மனைவி, இரண்டு குழந்தைகளை கொலை செய்துவிட்டோமே என்று மணிகண்டன் ஒரு மணி நேரத்திற்கு மேல் தனியாக அழுது துடித்துள்ளார். ஆத்திரத்தில் என்ன செய்கிறேன் என்று அறியாமல் சுயநினைவு இழந்து தனது குடும்பத்தையே கொலை செய்துவிட்டேனே என்று தனக்கு தானே அழுது துடித்துள்ளார்.
தீவிர விசாரணை:
பிறகு, மனைவி 2 மகன்களை கொலை செய்ததால் தன்னை போலீஸ் பிடித்துவிடும், தாராவின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என்ற பயத்தில் மணிகண்டன் சமையல் அறைக்கு சென்று தனது வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், மணிகண்டனுக்கு கடன் கொடுத்த நண்பர்கள், அவர் வேலை செய்து வந்த தனியார் வங்கி ஊழியர்கள் மற்றும் உறவினர்களிடம் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்