"இப்படி யாராவது போன் பண்ணா அதை நம்பிடாதீங்க".. புதுசாக வலை விரிக்கும் கும்பல்.. சென்னை கமிஷனர் எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மின்சார கட்டணம் செலுத்தவில்லை என பொய் கூறி சில கும்பல்கள் பொதுமக்களிடம் பணம் பறித்து வருவதாகவும் மக்கள் எச்சரிக்கையோடு இருப்பதாகவும் சென்னை போலீஸ் கமிஷனர் தெரிவித்திருக்கிறார்.
இணைய வசதி மனிதர்களுடைய வாழ்க்கையை வேறு உயரத்திற்கு எடுத்துசென்றிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் பலனாக உலகத்தின் அடுத்த பகுதியில் இருப்பவர்களோடு கூட நம்மால் நொடிப்பொழுதில் முகம்பார்த்து பேச முடிகிறது. ஆனாலும், இந்த வசதிகளை தவறான காரியங்களுக்கு பயன்படுத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பொதுமக்களிடம் இருந்து பணத்தினை பறிக்க பல்வேறு யுக்திகளை இந்த கும்பல்கள் பின்பற்றிவருகின்றன. அந்த வகையில் சமீப காலமாக மின் இணைப்பு குறித்து பேசி பணத்தினை சுருட்டிவருகிறது ஒரு கும்பல். இவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரித்திருக்கிறார் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால்.
மின் இணைப்பை துண்டிப்போம்
சமீப காலமாக சென்ற மாதத்திற்கான மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் அதனால் மின் இணைப்பை துண்டிக்க இருப்பதாகவும் பொதுமக்களுக்கு சில மோசடி நபர்கள் குறுஞ்செய்தி அனுப்பி வருவதாக தெரிவித்திருக்கிறது காவல்துறை. மேலும், உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்புகொண்டு பாக்கி கட்டணத்தை செலுத்துமாறு கூறும் இந்த மர்ம நபர்கள் வாட்சாப் எண்ணையும் அந்த குறுஞ்செய்தியில் அனுப்புகிறார்கள்.
அந்த மெசேஜை நம்பி பணம் செலுத்தும் மக்களிடம் இருந்து வங்கி குறித்த தகவல்களை பெற்று வங்கியில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்துவருகின்றன. இதனால் இதுபோன்ற நபர்களிடம் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட வங்கி தகவல்களை பகிர வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
எச்சரிக்கை
இதுகுறித்து சென்னை காவல்துறை, பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலியான அழைப்புகளையும், குறுஞ்செய்தியையும் நம்பி ஏமாற வேண்டாம் எனவும், அந்த செல்போன் எண்களை தொடர்புகொள்ள வேண்டாம் என எச்சரித்துள்ளது. அதுமட்டும் அல்லாமல், மின்வாரியத்தில் இருந்து இதுபோன்ற போன் கால்களோ, குறுஞ்செய்தியோ அனுப்பப்படாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் சென்னை மாநகர கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Also Read | "இதையா கல்யாணம் செஞ்சுக்க போறீங்க..தெறிச்சு ஓடிய மக்கள்".. இப்படியும் ஒரு திருமண தம்பதி..!
மற்ற செய்திகள்