'8 வருட காதல்'... 'திடீரென காதலன் போட்ட கண்டீஷன்'... 'காதலி எடுத்த விபரீத முடிவு'... இறுதியில் காத்திருந்த சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கே.கே.டி நகர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் தேவி. 22 வயதான இவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மருத்துவமனைக்குச் சென்ற போலீசார், அந்த இளம் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது அந்த பெண் காதலனால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது. தேவி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது விகாஸ் என்ற 20 வயது இளைஞருடன் காதல் வயப்பட்டுள்ளார். தேவி படிப்பை முடித்து தனியார் நிறுவனத்திற்கு பணிக்குச் சென்று விட்டாலும் கடந்த எட்டு வருடங்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இதனிடையே ஆட்டோ ஓட்டி வந்த காதலன் விகாஸுடன் தேவி நெருங்கிப் பழகிய நிலையில் அவர் இரு முறை கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து விகாஸ் அளித்த போலியான திருமண வாக்குறுதியை நம்பி இருமுறையும் கருவைக் கலைத்ததாகவும் கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் விகாஸுக்கும் அவரது மாமா பெண்ணுக்கும் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டார்கள். இதனால் தேவியுடன் பேசுவதைத் தவிர்த்து வந்த விகாஸ், தங்கள் வீட்டில் வரதட்சணையாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் திருமணம் செய்து வைப்பார்கள் என்று கூறி தேவியுடன் பழகுவதைத் தவிர்த்துள்ளார்.
உயிருக்கு உயிராகப் பழகிவிட்டு பணத்திற்காகக் காதலை, காதலன் தூக்கி எறிந்து விட்டாரே என்ற விரக்தியில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தேவி போலீசாரிடம் கூறியுள்ளார். இதையடுத்து விகாஸை அழைத்துக் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் விசாரித்த போது, அவன் தேவி மீது காதலாக இருப்பதும் அவனது குடும்பத்தினரின் நிர்ப்பந்தத்தின் பேரிலேயே அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் விகாஸ் கூறியுள்ளார். மேலும் தனது குடும்பத்தைச் சமாதானம் செய்து இன்னொரு நாளில் தேவியைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி போலீசாரிடம் அவகாசம் வாங்கி செல்ல விகாஸ் முயன்றார்.
உடனே காதலில் உறுதியாக இருப்பது உண்மையானால், இப்போதே திருமணம் செய்து கொள்ளலாமே, அதற்கு ஏன் அவகாசம் வேண்டும் என விகாஸை மடக்கிய காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ், தனது செலவில் பூ மாலை மற்றும் மஞ்சள் தாலியை வாங்கிவரச்செய்தார். அவரது முன்னிலையில் காதலன் விகாஸ், காதலி தேவிக்கு மாலை மாற்றி மஞ்சள் தாலி கட்டினார். 8 வருடக் காதலைத் திருமணத்தில் சேர்த்து வைத்து வைத்து இளம்பெண்ணுக்கு நீதியையும் காவல் ஆய்வாளர் ஆபிரகாம் குரூஸ் வாங்கி கொடுத்தார்.
அதேநேரத்தில் தற்கொலை என்பது எதற்கும் தீர்வாகாது எனக் கூறிய போலீசார், பள்ளியில் படிக்கும் நேரத்தில் படிப்பில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும், அந்த நேரத்தில் காதல் என்று சென்று வாழ்க்கையை வீணாக்க வேண்டாம் எனத் தெரிவித்தார்கள்.
மற்ற செய்திகள்