'வாகன ஓட்டிகளே கவனம்'... 'சென்னையில் அறிமுகமாகும் 'ஜீரோ வயலேஷன் ஜங்ஷன்'... சென்னை காவல்துறை அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சாலைகளில் வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணியாமல் செல்வது, சீட் பெல்ட் போடாமல் பயணம் செய்வது, குறிப்பாக செல்போன் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவது மஞ்சள் விளக்கு விழுந்தவுடன் வாகனங்கள் சீறிப் பாய்வது, வெள்ளை கோட்டை தாண்டி வந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவை கட்டுப்படுத்த முடியாத போக்குவரத்து விதிமுறை மீறல்களாகும்.
இதுபோன்ற காரணங்களே விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகள் தான். இதுபோன்ற விதிமீறல்களைத் தடுத்து விபத்துகளைக் குறைப்பதற்காக சென்னை போக்குவரத்து காவல்துறையினரால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் ஜீரோ வயலேஷன் ஜங்ஷன். முதற்கட்டமாக அண்ணா சாலை ஸ்பென்சர் சிக்னல், அண்ணா ஆர்ச் சிக்னல், திருவான்மியூர் சிக்னல் மற்றும் மாதவரம் ரவுண்டானா சிக்னல் ஆகிய நான்கு சிக்னல்களிலும் இந்த ஜீரோ வயலேஷன் ஜங்க்ஷன் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த ஜீரோ வயலேஷன் ஜங்க்ஷனின் முக்கிய நோக்கம் போக்குவரத்து விதிமுறைகளை முற்றிலுமாக குறைப்பது ஆகும். விதிமுறைகள் குறைந்தாலே விபத்துகளும் குறையும். முதற்கட்டமாக அமல்படுத்தவிருக்கும் இந்த 4 ஜங்ஷன்களிலும் போக்குவரத்து காவலர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் என 20 போலீசார்கள் எப்பொழுதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர்.
தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட்டுகள் அணியாமல் வாகனங்களை ஓட்டுபவர்கள், இருசக்கர வாகனத்தில் 3 பேர் அணிந்து செல்பவர்கள், சிக்னலில் வெள்ளை கோட்டை தாண்டி வாகனங்களை நிறுத்துபவர்கள், குறிப்பாக சிக்னலில் மஞ்சள் விளக்குப் போட்டவுடன் வாகனங்களில் சீறிப்பாய்வர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக ரூ.500 வரை ஸ்பாட் ஃபைன் விதிக்கப்படும்.
வாகன ஓட்டிகள் யாரேனும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் அல்லது பிரச்சனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டம் ஒழுங்கு காவலர்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள். முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த நான்கு ஜங்க்ஷன்கள் மட்டுமல்லாமல் விரைவில் சென்னை முழுவதும் உள்ள சிக்னல்களில் ஜீரோ வயலேஷன் ஜங்ஷன் தொடங்கப்படும் என சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதற்காக இந்த, ஒரு வாரம் முழுவதும் போலீசார்கள் அந்தந்த சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்கு இந்த திட்டம் பற்றி அறிவுரைகளை வழங்குவார்கள். அடுத்த வாரத்திலிருந்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் மீண்டும் ஒரு நபர் விதிமுறைகளை ஈடுபடும்போது அவர்களது லைசென்ஸ் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்படும்.
இதன்மூலம் சென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் முற்றிலும் கட்டுப்படுத்தப்படும். அதனால் சாலை விபத்துகளும் பெருமளவில் குறைக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றார் போக்குவரத்து கூடுதல் ஆணையர்.
மற்ற செய்திகள்