2.25 லட்சம் மதிப்புள்ள 'சிறப்பு' ஊசிகள்... கடைசிவரை முயன்றும் 'காப்பாற்ற' முடியவில்லை... கமிஷனர் உருக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவுக்கு சென்னை மாம்பலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுரளி இறந்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாலமுரளி அதற்காக சிகிச்சைகள் எடுத்தும் அவர் உடல்நிலை சீராகவில்லை.. இதையடுத்து அவருக்கு விலையுயர்ந்த சிறப்பு ஊசிகள் போடுமாறு மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அவரின் குடும்பத்தினரிடம் அந்த தடுப்பூசிகள் வாங்கும் அளவுக்கு பணமில்லை என்பதையறிந்த, சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தன்னுடைய சொந்த செலவில் 2.25 லட்சம் கொடுத்து அந்த தடுப்பூசிகளை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாலமுரளி இறந்தார். இதையடுத்து அவரது உடல் நேற்று முன்தினம் இரவு முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், ''நல்ல மனிதர். கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதற்காக மிகவும் மெனக்கெட்ட சின்ஸியர் ஆபிஸர். அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தோம். தடுப்பூசி போடப்பட்ட பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் தெரிந்தது.
ஆனால் எங்களின் நம்பிக்கையை மீறி எல்லாம் நடந்து விட்டது. பாலமுரளியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள். பையனுக்கு 16 வயதும், பெண்ணுக்கு 14 வயதும்தான் ஆகிறது. அவரின் மனைவி பி.ஏ கிராஜூவேட் என்பதால் அவருக்கு வேலை வழங்கப்படும். அவரது மரணம் அவரது குடும்பத்திற்கு தாங்க முடியாத இழப்பாக அமைந்து விட்டது,'' என வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக இன்ஸ்பெக்டர் பாலமுரளி பணியாற்றிய மாம்பலம் காவல் நிலையத்தில் நேற்று காலை படத்திறப்பு விழா நடந்தது. அதில் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள போலீசாரும் நேற்று மாலை 2 நிமிடம் பாலமுரளிக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
மற்ற செய்திகள்