‘தங்கச்சி மயங்கி கிடக்கா, பீரோ உடஞ்சிருக்கு’!.. ‘மகனுக்காக நாடகமாடிய குடும்பம்’!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அம்பத்தூர் அருகே சொந்த வீட்டில் திருடிய மகனை காப்பாற்ற குடும்பமே நடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘தங்கச்சி மயங்கி கிடக்கா, பீரோ உடஞ்சிருக்கு’!.. ‘மகனுக்காக நாடகமாடிய குடும்பம்’!.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!

சென்னை அம்பத்தூர் அடுத்த கள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (45). இவரது மனைவி சிவகாமி (38). இந்த தம்பதிக்கு 15 வயதில் மகனும், 13 வயதில் மகளும் உள்ளனர். சம்பத்தன்று பெற்றோர் வெளியே சென்றுள்ளனர். வீட்டில் இரண்டு குழந்தைகளும், பாட்டியும் இருந்துள்ளனர். அப்போது பாட்டி குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து வெளியே வரும்போது தங்கை மயங்கி கிடந்துள்ளார்.

பதற்றத்துடன் காணப்பட்ட சிறுவன், தங்கச்சி மயங்கி கிடக்கிறாள். பீரோ உடைக்கப்பட்டுள்ளது பாட்டி என தெரிவித்துள்ளார். நிலைமையை புரிந்துகொண்ட பாட்டி தண்ணீர் தெளித்து சிறுமியை எழுப்பியுள்ளார். கண்விழுத்த பேத்தி, வீட்டுக்கு வந்த ஒருவர் என் முகத்தில் கர்சீப் வைத்தார். அதன் பிறகு என்ன நடந்தது என தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பீரோவை சோதித்தபோது பணம் திருடு போயுள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், தங்கராஜுக்கும், சிவகாமிக்கும் போனில் தகவலை தெரிவித்துவிட்டு காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் முதலில் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் பாட்டியிடம் தெரிவித்த அதே தகவலை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராய்ந்து பார்த்துள்ளனர். ஆனால் அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அதனால் அப்பகுதியில் வேலை பார்த்த நான்கு பேரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது, இந்த பகுதியில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என்றும், அந்த வீட்டிலிருந்து அப்படி யாரும் வெளியே வரவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து இதேபோல் அப்பகுதியில் ஏதேனும் திருடு போயுள்ளதா என போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ளவர் வீட்டிலிருந்து பட்டப்பகலில் லேப்டாப், செல்போன் திருடு போயுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து புகார் ஏதும் கொடுக்கவில்லை என சம்பந்தப்பட்டவர் தெரிவித்துள்ளார். திருடு போன செல்போன் ஐஎம்இஐ நம்பரை ஆய்வு செய்தபோது, அந்த செல்போனை ஒருவர் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது, இன்னொரு நபரிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கியதாக தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்போன் விற்ற நபரிடம் விசாரித்ததில், சிறுமியின் அண்ணன் தன்னிடம் விலைக்கு விற்ற தகவலை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மீண்டும் சிறுமி, அவரது அண்ணன் மற்றும் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே பதிலை கூறியுள்ளனர்.

அப்போது சிறுவன் திருடிய செல்போனை போலீசார் காண்பித்துள்ளனர். இதைப் பார்த்ததும் சிறுவனின் முகம் மாறியுள்ளது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து ஒவ்வொருவராக நடந்த உண்மைகளை போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். அதில், சில நாட்களுக்கு முன்பு எதிர் வீட்டில் இருந்து லேப்டாப் மற்றும் செல்போனை திருடி சிறுவன் விற்றுள்ளான். அந்த பணத்தில் ட்ரோன் வாங்கி விளையாடிய சிறுவனைப் பார்த்து பணம் எப்படி வந்தது என பெற்றொர் விசாரித்துள்ளனர். அப்போது எதிர்வீட்டில் திருடிய சம்பவம் தெரியவந்துள்ளது. ஆனால் மகனை காப்பாற்ற அந்த சம்பவத்தை அப்போது அனைவரும் மறைத்துள்ளனர்.

இந்த சமயத்தில் பாட்டி தனது பணத்தை பீரோவில் வைத்ததை சிறுவன் பார்த்துள்ளான். இதை திருட முடிவெடுத்த சிறுவன், புதிய செல்போன் வாங்கி தருவதாக கூறி தங்கையையும் உடன் சேர்த்துள்ளார். பின்னர் பணத்தை திருடிவிட்டு யாரோ திருடியதாக இருவரும் நாடகமாடியுள்ளனர். பீரோவில் இருந்த பணம் மட்டும் திருடு போனதால், சிறுவன்தான் எடுத்திருக்க வேண்டும் என பெற்றோர் நினைத்துள்ளனர். இதனை அடுத்து மகனை காப்பாற்ற பீரோவில் இருந்த பணம் மற்றும் நகை காணாமல் போனதாக பொய் புகார் கொடுத்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மேலும் படிக்க: ‘இன்னொரு டி.என்.ஏ-வும் கலந்துருக்கு’!.. ‘கை, காலை கட்டி பாலியல் வன்கொடுமை’!.. கோவை 1ம் வகுப்பு சிறுமி கொலையில் திடீர் திருப்பம்..!

POLICE, CHENNAI, THEFT, FAMILY