சென்னை அண்ணாநகர் ஐந்தாவது அவென்யூ, குடியிருப்பில் வசிப்பவர் பாலசுப்ரமணியன். பிரபலமான தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் எம்.டி யாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பாலசுபராமணியனுக்கு சொந்தமான ஜாக்குவார் கார் கடந்த மாதம் 30 - ம் தேதியன்று காணாமல் போயுள்ளது. இதனைத் தொடர்ந்து அண்ணாநகர் காவல் நிலையத்தில் பாலசுப்ரமணியன் புகாரளித்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது பாலசுப்பிரமணியனின் டிரைவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது அப்பகுதியிலுள்ள காவலாளி ஜெயராமன் என்பவர் இந்த காரை சில நேரங்களில் ஓட்டுவார் என்ற தகவலைக் கூறியுள்ளார்.
அதே போல, ஜாக்குவார் காரின் சாவி, சில தினங்களுக்கு முன் காணாமல் போனதாகவும் டிரைவர் போலீசாரிடம் கூறியுள்ளார். கார் சாவி தொலைந்த போது காவலாளி ஜெயராமனும் உடன் இருந்ததாகவும் டிரைவர் தெரிவித்துள்ளார். உடனடியாக சந்தேகத்தின் பெயரில் காவலாளி ஜெயராமனை போலீசார் பிடித்து விசாரித்தனர். 'ஜாக்குவார் காரை திருடி தன்னால் என்ன செய்ய முடியும் என ஜெயராமன் கூறியுள்ளார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காவலாளி ஜெயராமன் காரை திருடிக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.
இதனையடுத்து ஜெயராமனும் காரை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர், அம்பத்தூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜாக்குவார் காரை போலீசார் மீட்டனர். பாலசுப்ரமணியன் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் செக்யூரிட்டி ஜெயராமன் பணியாற்றியுள்ளார். அப்போது பாலசுப்ரமணியன் காரில் செல்லும்போது அவருக்கு சல்யூட் அடித்தும் காரின் கதவைத் திறந்துவிடுவது போன்ற வேலைகளை செய்துள்ளார். ஜெயராமனுக்கு கார் ஓட்ட தெரியும் என்பதால் சில நேரங்களில் பாலசுப்பிரமணியத்தை ஜாக்குவார் காரில் அழைத்துக் கொண்டு ஜெயராமன் சென்றுள்ளார்.
பின்னர் தன்னுடைய 2 லட்சம் கடனைத் தீர்க்க வேண்டி ஜாக்குவார் காரை திருட எண்ணிய ஜெயராமன், முதலில் சாவியை திருடியுள்ளார். பின்னர் அதன்மூலம் காரை திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்