‘பைக் நல்லா இருக்கே ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’.. சென்னையில் லிப்ட் தந்த டான்சருக்கு ‘ஷாக்’ கொடுத்த இருவர்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் லிப்ட் கேட்பது போல் நடித்து இளைஞர்கள் பைக்கை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘பைக் நல்லா இருக்கே ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?’.. சென்னையில் லிப்ட் தந்த டான்சருக்கு ‘ஷாக்’ கொடுத்த இருவர்..!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது 24). இவர் பல்வேறு ஊர்களுக்கு சென்று நடன நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இந்த சூழலில் கடந்த 19-ம் தேதி வெளியூர் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று விட்டு சென்ட்ரல் ரயில் நிலையம் வந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே இரு இளைஞர்கள் சரண்ராஜ் வழிமறித்து, எழும்பூரில் இறங்கி கொள்வதாக கூறி லிப்ட் கேட்டுள்ளனர். இதனை அடுத்து அந்த இரு இளைஞர்களையும் பைக்கில் ஏற்றிக் கொண்டு சரண்ராஜ் சென்றுள்ளார். எழும்பூர் காந்தி-இர்வின் பாலத்தில் வந்தபோது லிப்ட் கேட்ட இரு இளைஞர்களும் அங்கேயே இறங்கி கொள்வதாக கூறியுள்ளனர்.

பின்னர் சரண்ராஜிடம் லிப்ட் கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துள்ளனர். அப்போது பைக் மிகவும் அழகாக உள்ளது எனக்கூறி, லிப்ட் கொடுத்து உதவி செய்ததற்காக செல்பி எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதனை அடுத்து சரண்ராஜ் பைக்கில் இருந்து கீழே இறங்கி உள்ளார். சரண்ராஜும் சிரித்துக் கொண்டே செல்ஃபிக்கு போஸ் கொடுக்க, அந்த இருவரில் ஒருவர் பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு செல்ஃபிக்கு போஸ் கொடுத்துள்ளார். திடீரென்று சரண்ராஜை கீழே தள்ளிவிட்ட மற்றொரு இளைஞர், கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பைக்குடன் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சரண்ராஜ் உடனே எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் அந்த இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தேடிவந்தனர். இதனிடையே புளியந்தோப்பு நகரை சேர்ந்த சசிகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் அந்த இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து அவரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள தீனா என்ற இளைஞரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இதே பாணியில் இவர்கள் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்களை குறி வைத்து, லிப்ட் கேட்பது போல் நடித்து திருடி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னையை லிப்ட் கேட்பது போல் நடித்து விலை உயர்ந்த பைக்குகளை திருடிய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CHENNAI, BIKE, SELFIE

மற்ற செய்திகள்