'கொரோனா வந்துரும், body'ய கொண்டு போங்க'...'சடலத்தோடு சுற்றிய அதிகாரிகள்'... சென்னையில் தொடரும் சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நெல்லூரில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நோயின் தீவிரம் அதிகரித்ததால், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேல் சிகிச்சைக்காகச் சென்னை வானகரத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை, அம்பத்தூரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய அதிகாரிகள் கொண்டு சென்றனர். ஆனால் அவரது உடலை அங்கு எரிக்க மின் மயான ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் அதிகாரிகள் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நேரத்தில், கொரோனாவால் இறந்த நபரைத் தகனம் செய்யக் கொண்டு வந்திருப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து திடீரென அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
'இதையடுத்து அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டார்கள். மக்களிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்காததால், சடலத்தை இங்குத் தகனம் செய்ய மாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்து உடலை எடுத்துச் சென்றதால், போராட்டம் கைவிடப்பட்டது. இதற்கிடையே திருவேற்காடு பகுதியில் உடலைத் தகனம் செய்ய அதிகாரிகள் வந்திருப்பதாகத் தகவல் பரவியதால், அங்கும் 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள மயானத்தை மூடியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து உடலை இங்குத் தகனம் செய்யமாட்டோம் என அதிகாரிகள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றார்கள். ஒருவேளை நள்ளிரவில் வந்து தகனம் செய்து விடுவார்களோ என்ற பயத்தில், அந்த பகுதியைச் சேர்ந்த சிலர், மயானத்தின் முன்பு காவலுக்கு இருந்தனர். இதனால் சடலத்தைத் தகனம் செய்ய முடியாமல் அதிகாரிகள் தவித்து வருகிறார்கள்.