‘நெஞ்சுவலியால் சாய்ந்த ஓட்டுநர்’.. ‘அடுத்தடுத்து 10 கார்கள் மீது மோதி நின்ற பேருந்து’.. ‘சென்னையில் நடந்த பரபரப்பு சம்பவம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் நெஞ்சுவலி ஏற்பட்டு ஓட்டுநர் மயங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசுப்பேருந்து ஏற்படுத்திய விபத்தில் 10 கார்கள் சேதமடைந்துள்ளன.
சென்னை வேளச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தை ராஜேஷ் கண்ணா என்ற ஓட்டுநர் இயக்கியுள்ளார். வேளச்சேரி பிரதான சாலையில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வலி தாங்க முடியாமல் அவர் நெஞ்சைப் பிடித்தபடி இருக்கையில் சாய்ந்துள்ளார்.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த 10 கார்களின் மீது அடுத்தடுத்து மோதி நின்றுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் பொதுமக்கள் உதவியுடன் ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவை பேருந்தில் இருந்து இறக்கியுள்ளனர். பின்னர் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டது தெரியவந்துள்ளது.
பேருந்து மோதியதில் 10 கார்கள் சேதமடைந்துள்ள நிலையில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக வேளச்சேரியில் சிறிது நேரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.