ஆபத்தை உணராமல் சிலிண்டரை மாற்றியதால், சென்னையில் ஒரு குடும்பத்துக்கே நேர்ந்த சோகம்.. என்ன நடந்தது?!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் சமையல் எரிவாயுவை, வணிகத்துக்கான உருளையில் நிரப்பியபோது தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை (Chennai) திருவல்லிக்கேணி அடுத்த ரோட்டரி நகா் பகுதியை சேர்ந்தவர் காஜா மொய்தீன் (வயது 70). இவரது மகன் முகம்மது மீரான் (வயது 30), மனைவி பகத் (வயது 25). இவா்கள் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசிக்கின்றனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பில், மற்றொரு வீட்டில் மீரானின் சகோதரா் இஸ்மாயில் (வயது 35), மனைவி பாத்திமாவுடன் (வயது 32) வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காஜா மொய்தீன் வீட்டில் திடீரென சமையல் எரிவாயு கசிந்து, பொருள்கள் தீப்பிடித்து எரிந்தன. இதைப்பாா்த்த காஜா மொய்தீன், மீரான், பகத் ஆகியோா் சத்தமிட்டு அருகில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளனர். இதைக் உடனே அருகில் வசிக்கும் இஸ்மாயில், அவரது மனைவி பாத்திமா, மீரானிடம் வேன் ஓட்டுநராக வேலை செய்யும் தினேஷ் (வயது 33) ஆகியோா் விரைந்து வந்து வீட்டுக்குள் சிக்கியிருந்தவா்களை மீட்க முயற்சித்துள்ளனர்.
அதில் காஜா மொய்தீனையும், பகத்தையும் மீட்டனா். ஆனால் முகமது மீரான் தீயில் சிக்கிக் கொண்டாா். தகவலறிந்த வந்த தீயணைப்பு படையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் மீட்க சென்றவா்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தீ விபத்தில் காயமடைந்த காஜா மொய்தீன், பகத், இஸ்மாயில், பாத்திமா, தினேஷ் ஆகியோா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனிடையே வீட்டில் தீயை முழுமையாக அணைத்த தீயணைப்பு படை வீரா்கள், உள்ளே சென்றபோது அங்குள்ள ஒரு அறையில் முகம்மது மீரான் தீயில் சிக்கி இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து மீரானின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், உயிரிழந்த மீரான், காஜா மொய்தீன் ஆகியோா் வீட்டுக்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரை கடைகள், உணவங்களுக்கு பயன்படும் வணிக சிலிண்டர்களாக மாற்றி அதிக விலைக்கு விற்கும் தொழில் செய்து வந்தது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து வணிக பயன்பாட்டுக்குரிய சிலிண்டருக்கு சமையல் எரிவாயுவை மாற்றிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த, ஏசி முதலில் தீப்பிடித்து எரிந்து, பின்னர் வீடு முழுவதும் பரவியுள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்