'மொதல்ல pay பண்ணுங்க மேடம்...' 'காசு அனுப்பிய அடுத்த செகண்ட் வாட்ஸ்அப் குரூப்ல இருந்து தூக்கிய அட்மின்...' - ஆன்லைன் தில்லாலங்கடிகள் செய்த மோசடி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் கொடுத்து சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களான ஃபேஸ்புக், இன்ஸ்டா போன்ற செயலிகளில் பெண்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஆடைகளும், அணிகலன்கள் விளம்பரங்கள் வருவது இயல்பு. அதேபோல் ஒரு விளம்பரத்தை பார்த்து தன்னுடைய பணத்தை இழந்துள்ளார் சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த இந்திரா பிரகாஷ்.
இந்திரா தன்னுடைய முகநூலில் வந்த விளம்பரங்களை பார்த்துக்கொண்டிருந்த போது, தனக்கு பிடித்த ஆடைகள் குறித்த விவரங்களைத் தேடியுள்ளார். அதையடுத்து இந்திராவின் செல்பேசி எண்ணானது, 'SALE' என்ற வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டு, ஆடைகள் தொடர்பாக ஏராளமான விளம்பரங்களும் அதில் வந்துள்ளன. அக்குழுவில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினர்களாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மேலும் SALE வாட்ஸ்அப் குழுவின் அட்மின் தன்னிடம் தரமான துணிகள், வளையல்கள் குறைந்த விலையில் கிடைப்பதாகவும், வங்கிக் கணக்கில் பணம் செலுத்தினால் வீட்டுக்கு கொரியரில் அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனை நம்பிய இந்திரா அந்த நபரின் வங்கி கணக்குக்கு பணத்தையும் அனுப்பியுள்ளார். தன் வங்கி கணக்கில் பணம் வந்து சேர்ந்த உடன் அந்த வாட்ஸ்அப் குழுவில் இருந்து இந்திராவின் பெயர் நீக்கப்பட்டதுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரா, தன்னை ஏமாற்றிய நபர் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். காவல்துறையினரின் தீவிர விசாரணையில் SALE வாட்ஸ்அப் குழுவின் அட்மின் தாம்பரத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என கண்டுபிடித்து அவரை கைதும் செய்துள்ளனர்.
இந்திரா மட்டுமல்லாமல் இவரை போல, சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்களிடம் ராஜேந்திரன் பல லட்சம் ரூபாய் ஏமாற்றி இருப்பது தெரியவந்ததுள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் குற்றவாளியிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்