'சென்னையில் வெளுத்து வாங்கிய மழை'... 'தத்தளித்த வாகன ஓட்டிகள்'... 'இன்னும் மழை பெய்ய வாய்ப்பு'?... வானிலை மையம் வெளியிட்ட தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் ஏற்கனவே நள்ளிரவு முதல் மழை விடாமல் பெய்து வரும் நிலையில், மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு பெய்ய ஆரம்பித்த மழை இன்றும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், குரோம்பேட்டை, பல்லாவரம், உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை கனமழையாகவும் பின்னர் மிதமான மழையாகவும் பெய்துவருகிறது. தொடர் மழை காரணமாகச் சென்னையில் அதிகமாக மழை நீர் தேங்கும் பகுதியான வேளச்சேரியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆதம்பாக்கம், பெரியார் நகர் என பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழையால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிற்காமல் பெய்யும் மழையால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சிறிய மழைக்கே நிரம்பும் தாம்பரம் சுரங்கப்பாதை, கனமழை காரணமாக வழக்கம்போல மூழ்கியது. இதனால் வாகன ஓட்டிகள், தாம்பரம் ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து கிழக்குத் தாம்பரம் செல்ல 2 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாகச் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பகுதிவாசிகள் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். சென்னையின் பல சாலையில் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி இருக்கிறார்கள். கிண்டி தொழிற் பேட்டையிலிருந்து அண்ணா சாலை நோக்கிச் செல்லக்கூடிய சைதாப்பேட்டை பஜார் சாலையில் கனமழையின் காரணமாகத் தண்ணீர் தேங்கி இருக்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தண்ணீர் தேங்கியுள்ளதால் பஜார் சாலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், ''சென்னையில் மேலும் 6 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Heavy rain near #chennai airport with water logging in many areas #chennairains #Chennaiairport pic.twitter.com/KpkUsZfwIi
— Unnikrishnan R Santhosh (@realunnikrish) January 5, 2021
மற்ற செய்திகள்