'லவ்வர் தானேன்னு அந்தரங்க வீடியோவை அனுப்பிய இளைஞர்'... 'வீடியோ கைக்கு வந்ததும் காதலி வச்ச டிமாண்ட்'... ஆடிப்போன சென்னை ஐடி இளைஞர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முன்பின் தெரியாமல் சமூகவலைத்தளங்களில் பழகும் நபர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். உங்களின் அந்தரங்க விஷயங்களை அவர்களுக்கு ஷேர் செய்ய வேண்டாம் என காவல்துறையினர் பல்வேறு முறைகளில் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி இளம்பெண் ஒருவரிடம் வசமாகச் சிக்கிக் கொண்ட இளைஞர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

'லவ்வர் தானேன்னு அந்தரங்க வீடியோவை அனுப்பிய இளைஞர்'... 'வீடியோ கைக்கு வந்ததும் காதலி வச்ச டிமாண்ட்'... ஆடிப்போன சென்னை ஐடி இளைஞர்!

சென்னை தியாகராய நகர் காவல்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் பிரிவுக்குச் சமீபத்தில் புகார் ஒன்று வந்தது. அந்த புகாரில், ''தான் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக அந்த இளைஞர் குறிப்பிட்டிருந்தார். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பேஸ்புக் ஐடிக்கு பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் நட்பழைப்பு கொடுத்ததாகவும், ஆனால் அவர் யார் என்பது குறித்துத் தெரியாத காரணத்தினால் அவரது நட்பு அழைப்பை நீண்ட நாட்களாக ஏற்றுக் கொள்ளாமல் இருந்ததாகக் கூறியுள்ளார்.

இதையடுத்து ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் நட்பு அழைப்பை அந்த இளைஞர் ஏற்றுக் கொண்டுள்ளார். பின்னர் பிலிப்பைன்ஸ் பெண்ணுடன் அந்த இளைஞர் தினமும் பேச ஆரம்பித்த நிலையில், ஒரு கட்டத்தில் நெருங்கிப் பழகியுள்ளார். இந்த பழக்கம் இறுதியில் காதலாக மாறியுள்ளது. ஒரு கட்டத்தில் இருவருக்குள் இருந்த நெருக்கம் அதிகரித்த நிலையில், எதைக் குறித்தும் யோசிக்காமல் தனது அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை அந்த பெண்ணுக்கு அனுப்பியிருக்கிறார்.

இப்படியே செல்ல செல்ல அந்த இளைஞர் அனுப்பிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக் கொண்ட அந்த இளம்பெண், ஒரு நாள் பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டுள்ளார். அதாவது எனக்கு இப்போது 2 லட்ச ரூபாய் பணம் வேண்டும். இல்லையென்றால், ''நீ எனக்கு அனுப்பிய அந்தரங்க வீடியோ மற்றும் போட்டோ என அனைத்தையும் சேமித்து வைத்திருக்கிறேன். அவை அனைத்தையும் உனது நண்பனுக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டியுள்ளார்.

காதலி என நினைத்து அனுப்பினால் இப்படி ஒரு அதிர்ச்சி வரும் என சற்றும் நினைக்காத அந்த இளைஞர், வேறு வழி இல்லாமல் பயத்தில் 2 லட்சம் ரூபாய் பணத்தை அப்பெண்ணுக்கு அனுப்பிவிட்டு, இதோடு பிரச்சனை முடிந்ததென நினைத்திருக்கிறார். ஆனால் அப்போது தான் புதிய பிரச்சனை எழுந்தது. மீண்டும் அந்த இளைஞரை மிரட்டிய அந்த பெண், 5 லட்ச ரூபாய் வேண்டும் எனக் கேட்டுள்ளார். அப்போது தான் இதற்கு மேல் காத்திருந்தால் நிலைமை கையை விட்டுச் சென்று விடும் என்பதை உணர்ந்த அந்த இளைஞர், தி.நகர் துணை ஆணையர் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் ‌உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிந்துகொண்ட சைபர் பிரிவு போலீசார்‌, உடனடியாக பேஸ்புக் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு‌, புகார் அளித்த இளைஞருக்கும் அந்தப் பெண்மணிக்கும் உள்ள தொடர்பைத் துண்டிக்க வைத்துள்ளனர். அதோடு,‌   2‌ லட்சம் ரூபாய் பணத்தை, அந்தப் பெண்ணுக்குச் சேராமல் நிறுத்தி வைக்க வங்கி அதிகாரிகளிடமும் பேசி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே சைபர் குற்றங்கள் தற்போது அதிகரித்து வருவதாகக் கூறும் காவல்துறையினர், தெரியாத நபரிடம் இருந்து பேஸ்புக் அழைப்பு வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். அடையாளம் தெரியாதவர்கள் பேஸ்புக்கில் நண்பர்களாகி, மருத்துவ உதவி கேட்பது போல் பணம் பறிப்பது போன்ற புகார்களும் அதிகம் வருகிறதாம்‌. அப்படியே மோசடி நபர்களிடம் சிக்கித்தவிக்க நேர்ந்தாலும், தாமதிக்காமல், தயங்காமல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என்று சைபர் பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்களது தனிப்பட்ட வீடியோ, புகைப்படங்களை பேஸ்புக்கில் யாருக்கும் ஷேர் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அதை வைத்து உங்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதற்கு ஒரு கும்பல் இணையதளத்தில் வலம் வருகிறது, எனச்  சென்னை காவல்துறையின் சைபர் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பேச நேரமில்லை எனக் கூறும் நாம், யாரோ முகம் தெரியாத நபரிடம் பேசி நமது நிம்மதியையும், பணத்தையும் இழப்பது தான் சோகத்தின் உச்சம்.

மற்ற செய்திகள்