‘கூட்டாளிக்கு மதுபாட்டில், பிரியாணி’.. ‘ஸ்கெட்ச் போட்டு கொலை செய்த பூசாரி’ சென்னையை அதிர வைத்த சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அரசு வேலை பறிபோவதற்கு காரணம் எனக் கூறி ஐ.சி.எஃப் ஊழியரை கொலை செய்த பூசாரி மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வில்லிவாக்கம் அருகே உள்ள ராஜமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (58). இவர் சென்னையில் ரயில் பெட்டி தயாரிக்கும் (ஐ.சி.எஃப்) நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள அண்ணா தொழிற்சங்கத்தின் பொருளாளராகவும், ஐ.சி.எஃப் கூட்டுறவு சங்க இயக்குநராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று நண்பர்களை பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் மர்ம நபர்களால் ஜானகிராமன் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய ஓம்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான அனிஷ், குமரன், சரபோஜி, ரவிபிரசாத், சரத்குமார், விஜய் ஆகியோரை போலிசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜானகிராமனை ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் கொலைக்காக கூட்டாளிகளுக்கு மதுவும், பிரியாணி மட்டுமே வாங்கிக் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஓம்பிரகாஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், இளங்காளியம்மன் கோயிலில் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் தலைமுறை தலைமுறையாக பூசாரியாக இருந்து வருகிறோம். என் அப்பாவுக்கு பின் இந்த கோயிலில் நான் பூசாரியாக இருந்தேன். இந்த சமயத்தில் எனக்கும் ஜானகிராமனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நான் கோயிலுக்குள் கஞ்சா போதையில் இருப்பதாக வீடியோ ஒன்றை இந்து அறநிலைத்துறையிடம் கொடுத்தார். அதனால் இந்து அறநிலைத்துறை என்னை வேலையை விட்டு நீக்க முடிவெடுத்தனர். எனக்கு அரசு வேலை பறிபோனதற்கு ஜானகிராமன் தான் காரணம் என கருதி அவரை கொலை செய்ய திட்டமிட்டேன்.
இதற்காக என் நண்பர்களுடன் சேர்ந்து ஆலோசனை நடத்தினேன். தீபாவளியன்று ஜானகிராமனை கொலை செய்ய திட்டமிட்டோம். அதனால் அவரை நோட்டமிட ஒருவரை அவரது வீட்டுக்கு அனுப்பினோம். அவர் ஜானகிராமன் வீட்டில் இருந்து வெளியில் வருவதை தெரிவித்தார். உடனே அவரை பின் தொடர்ந்தோம். ஆள் நடமாட்டம் இருந்ததால் அவரை விட்டுவிட்டோம். பின்னர் ஜானகிராமன் வீட்டுக்கு புறப்பட்டபோது அவரை 3 பேர் பைக்கில் பின் தொடர்ந்து சென்றோம். அப்போது மழை பெய்ததால் ஆள் நடமாட்டம் இல்லை. மேலும் பட்டாசு சத்தம் அதிகமாக கேட்டது. அதனால் அவரின் பைக் மீது மோதினோம். அப்போது அங்கு மறைந்திருந்த 3 பேர் அரிவாளால் ஜானகிராமனை வெட்டினர். பின்னர் தலைமறைவாக இருந்த எங்களை போலீசார் பிடித்துவிட்டனர் என வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
News Credits: Vikatan