'சென்னை உணவகங்களுக்கு எழுந்துள்ள புதிய சிக்கல் இதுவா?'.. தொடங்கும் அவல நிலை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையிலும் புறநகர்ப்பகுதிகளிலும் தண்ணீர்ப் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளதாகவும் ஆங்காங்கே தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் குடியிருப்புவாசிகள் தொடங்கி, ஐடி நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் பிரபல ஐடி நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் முறையே தங்களது ஊழியர்களையும், தங்கள் பள்ளிகளில் பயிலும் மாணவர்களையும், சொந்தமாக குடி தண்ணீர் எடுத்துவரச் சொல்லி வலியுறுத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் பல இடங்களில் சென்னையில் உணவகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபலமான ஒரு உணவகம் தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் மூடப்படும் அபாயகட்டத்தை சந்தித்து நெருக்கடியில் தவித்து வந்தது. முன்னதாக தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியத்தில் இருந்து 15 நாளுக்கொருமுறை தண்ணீர் பெறப்பட்டது.
ஆனாலும் தண்ணீர்த் தட்டுப்பாட்டுக்கு பிறகு தனியார் மினரல் வாட்டர் கேன்களை நம்பி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்த இந்த உணவகத்துக்கு, தற்போது தனியார் குடிநீர் லாரிகளின் மூலமும் தண்ணீர் கிடைக்காததாலும் அவற்றின் விலை அதிகரித்துள்ளதாலும், இந்த ஹோட்டல் உட்பட இன்னும் சில ஹோட்டல்கள் ஆங்காங்கே மூடப்பட்டுள்ளதோடு, சில ஹோட்டல்களில் ஓரிரு வேளைக்கான சேவை முடங்கியுமுள்ளதாகத் தெரிகிறது.