'3 பசங்க, கால் வயித்துக்கு கஞ்சி இல்ல'... 'கொள்ளி வைக்க வீடு படியேறி வந்துராதீங்க டா'... 'சிக்கிய உருக்கமான கடிதம்'... சென்னையில் நடந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிறிய வயதிலிருந்து கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து, குழந்தைகளை ஆளாக்கிப் பார்ப்பதுதான் பெற்றோரின் சந்தோசமாக உள்ளது. அந்த பெற்றோரைக் கடைசிக் காலத்தில் நன்றாகப் பார்த்துக் கொள்வது என்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடைமையாகவும். ஆனால் சென்னையில் நடந்துள்ள சம்பவம் மனசாட்சி இருக்கும் ஒவ்வொருவரையும் கலங்க வைக்கும்.

'3 பசங்க, கால் வயித்துக்கு கஞ்சி இல்ல'... 'கொள்ளி வைக்க வீடு படியேறி வந்துராதீங்க டா'... 'சிக்கிய உருக்கமான கடிதம்'... சென்னையில் நடந்த சோகம்!

பெரம்பூர், மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிப்பவர்கள் குணசேகரன் - செல்வி தம்பதி. 60 வயதாகும் குணசேகரன் கார்பென்டராகப் பணியாற்றி வந்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். தற்போது கொரோனா காரணமாக குணசேகரனுக்கு வேலை இல்லாத நிலையில், அவர் செக்யூரிட்டி பணிக்கு சென்று வந்துள்ளார். அவர்களின் முதல் இரண்டு மகன்களும் திருமணமான பின் தாய் தந்தையரைப் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர். மூன்றாவது மகன் ஸ்ரீதருக்கு திருமணமாகவில்லை. இவர்  மட்டும் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். ஆனால் அவர் குடிக்கு அடிமையானதால் வேலையில் கிடைக்கும் பணத்தைக் குடிக்குச் செலவழித்து வந்துள்ளார்.

Chennai : Elderly couple commits suicide, leaves suicide letter

வேலை செய்து பெற்றோரைக் காப்பாற்ற வேண்டிய மகனே, வேலைக்குச் செல்லாத நேரத்தில் குடிப்பதற்கு வயதான பெற்றோரைத் துன்புறுத்தி பணத்தைப் பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் தான் கொரோனா ஊரடங்கால் குணசேகரன் பார்த்துவந்த செக்யூரிட்டி வேலையும் பறிபோனது. இதனால், போதிய வருமானமில்லாமல் வறுமையால் வாடினர். ஒரு வேளை சாப்பிடுவதற்கே இருவரும் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார்கள். வயதான காலத்தில் பெற்றோரைப் பார்க்க வேண்டிய மகன்கள் அவர்களைக் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவில்லை. உதவியாக இருக்க வேண்டிய கடைசி மகனும் குடித்து விட்டு ஊதாரித்தனமாகச் சுற்றி வந்துள்ளார்.

இந்தநிலையில் இனிமேல் வாழவேண்டாம் என முடிவு செய்த இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். இறப்பதற்கு முன்பு அவர்கள் எழுதிவைத்த கடிதத்தில், “எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்கள் உடலை காவல்துறையினர் தான் அடக்கம் செய்யவேண்டும்” என்று எழுதி வைத்துள்ளனர். மேலும் மகன்கள் கொள்ளி வைக்கக் கூடாது என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். சம்பவம் குறித்து அறிந்த செம்பியம், உதவி ஆணையர் சுரேந்தர் இறந்தவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இந்த மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் முதியவர்களின் குடும்பத்தாரிடம் விசாரணை செய்து வருகின்றனர். குணசேகரன்- செல்வி  கடைசி விருப்பத்தின்படி, உதவி ஆணையர் சுரேந்தர் தலைமையில் அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 3 மகன்கள் இருந்தும், வயதான காலத்தில் அவர்களைக் கவனிக்காமல் விட்டு, இன்று அவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்