'கேன் உற்பத்தியாளர்கள் போட்ட குண்டு'... 'தண்ணீர் கேன் கிடைக்குமா'?... அச்சத்தில் சென்னைவாசிகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் எடுத்துள்ள அதிரடி முடிவால், குடிதண்ணீர் சப்ளை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

'கேன் உற்பத்தியாளர்கள் போட்ட குண்டு'... 'தண்ணீர் கேன் கிடைக்குமா'?... அச்சத்தில் சென்னைவாசிகள்!

சென்னை மக்கள் மற்றும் நிறுவனங்கள் எனப் பலரும் குடிநீருக்காகத் தண்ணீர் கேனையே நம்பி உள்ளார்கள். தமிழகம் முழுவதும் 1689 கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 400-க்கும் மேற்பட்ட குடிநீர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதன் மூலமாகத் தினமும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட கேன் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே 2014-ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைத் தடுக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் சிவமுத்து என்பவர் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதைக் கட்டுப்படுத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதன் காரணமாக கேன் குடிநீர் உற்பத்தி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனிடையே சென்னை பெருநகர கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க நிறுவனர் முரளி கூறும்போது, ''மக்களின் குடிநீர்த் தேவைக்காக மட்டுமே தண்ணீர் எடுக்கப்படுகிறது.

தொழில்துறையின் தேவைக்காக எடுக்கவில்லை. அதேநேரத்தில் சட்டப்படி செயல்படும் எங்கள் ஆலைகளை மூடினால் சட்டவிரோதமாக நிலத்தடிநீர் எடுப்போர் எண்ணிக்கை அதிகமாகி விடும். இதில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். குடிநீர் கேன் விநியோகமும் பாதிக்கப்படும்'' எனத் தெரிவித்தார்.

CHENNAI, DRINKING WATER, CANE, STRIKE