'ஏடிஎம் கார்ட்... OTP... கிரெடிட் கார்ட்!'.. எதுவுமே தேவை இல்ல'!.. ஒரே ஒரு மெசேஜ்... லட்சக்கணக்கில் பணம் திருடியது எப்படி?.. சென்னையில் திகில் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வாடிக்கையாளர் சேவை மையம் எனக் கூறி மருத்துவரின் செல்போனை ஹேக் செய்து லட்சக்கணக்கான பணத்தை திருடிய மர்ம நபர்களின் நூதனமான ஹை-டெக் திருட்டில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அண்ணா நகரைச் சேர்ந்த சாந்தினி பிரபாகர் என்ற மருத்துவரின் செல்போன் எண்ணுக்கு, வாடிக்கையாளர் குறித்த முழு விவரங்கள் தருமாறும், தகவல்களை தரத் தவறினால், சிம் கார்டு செயலிழந்துவிடும் என குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த மருத்துவர், உடனடியாக குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணை வாடிக்கையாளர் சேவை மையம் என நம்பி, தொடர்பு கொண்டு பேசவே, கியூபே என்ற செயலிக்கான லிங்க்-ஐ மருத்துவரின் செல்போனுக்கு அனுப்பி வைத்த மர்ம நபர்கள், அதன் மூலம் 10 ரூபாய் பணப் பரிமாற்றம் செய்யுமாறு கூறியுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, 10 ரூபாயை ஆன்லைன் பேமெண்ட் மூலம் அனுப்பிய சில நிமிடங்களிலேயே மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சம், 90 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் என அடுத்தடுத்து பணம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னரும் அழைப்பை துண்டிக்க முடியாமலும், செல்போனை பயன்படுத்த முடியாமல் இருந்ததையும் உணர்ந்த மருத்துவர், செல்போன் ஹேக் செய்யப்பட்டதை அறிந்து லேண்ட்லைன் மூலமாக தன்னுடைய வங்கி கணக்கு உள்ள எஸ்பிஐ வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், அழைப்பு வந்த எண், ட்ரூ காலரில் வோடோபோன் கேஒய்சி சர்வீஸ் என்ற பெயர் காட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தான் க்யூபே என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வங்கிக் கணக்கு மூலமாக பணம் செலுத்தும் போது, தன்னுடைய போனை ஹேக் செய்து முழு கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்ட மர்ம நபர்கள், OTP எண்ணையோ, கிரெடிட் கார்ட், டெபிட் கார்டுகள் தொடர்பான எந்த தகவலையும் தெரிவிக்காமலேயே, தன்னுடைய போனை ஹேக் செய்து இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, விசாரணையை தொடங்கியுள்ள அண்ணாநகர் சைபர் கிரைம் போலீசார், சிம்கார்டு நிறுவனங்களிலிருந்து குறுஞ்செய்தி வருவதுபோல் சிலர் குறுஞ்செய்திகள் அனுப்புவதாகவும், குறிப்பாக கேஒய்சி அப்டேட் செய்ய வேண்டும், இல்லையெனில் சிம்கார்டு செயலிழந்து விடும் என குறுஞ்செய்திகள் அனுப்பி மோசடியை அரங்கேற்றுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த மோசடி கும்பல் டீம் வீவர் போன்ற பல செயலிகளை பயன்படுத்தி ஏமாற்றுவதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். மர்ம நபர்கள் கூறும் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் நபர்களின் செல்போன்களை ஹேக் செய்து அவர்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி விடுவதாகவும், குறிப்பிட்ட செயலி பதிவிறக்கம் செய்யப்பட்ட செல்போன் மூலம் வேறு கால்கள் செய்ய முடியாமலும் முடக்கி விடுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற மோசடிகள் அதிகளவு நடந்து வருவதாக கூறியுள்ள போலீசார், குறிப்பாக பிஎஸ்என்எல், வோடபோன் ஆகிய செல்போன் நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
மற்ற செய்திகள்