தேசிய சுற்றுலா சென்ற அரசு பள்ளி மாணவர்கள்.. வழியனுப்பி வைத்த மேயர் பிரியா.. சபாஷ் சொல்ல வைக்கும் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று வரும் 50 மாணவர்களை தேசிய கல்வி சுற்றுலாவிற்கு அனுப்பியுள்ளது சென்னை மாநகராட்சி. இன்று பெரம்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து சுற்றுலா கிளம்பிய மாணவர்களை மேயர் பிரியா ரயில் நிலையத்திற்கு சென்று வழியனுப்பி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் மாநகராட்சி பள்ளிகளில் 10-ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 50 மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக தேசிய கல்வி சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு சுற்றுலா செல்ல தேர்வான 10 மாணவர்கள் மற்றும் 40 மாணவிகள் இன்று தங்களது பயணத்தை துவங்கினர்.
இந்த ஆண்டு தேசிய கல்விச் சுற்றுலாவாக சண்டிகர், சிம்லா மற்றும் டெல்லி ஆகிய வட இந்தியப் பகுதிகளுக்கு மாணவர்கள் செல்கின்றனர். இந்நிலையில் பெரம்பூர் ரயில்வே நிலையத்தில் இருந்து கிளம்பிய மாணவர்களை நேரில் சந்தித்து அறிவுரை மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்த மேயர் பிரியா, இனிப்புகள், குளிர்பானங்கள் அடங்கிய பெட்டகங்களை மாணவர்களுக்கு வழங்கினார். மேலும், மாணவர்களோடு கலந்துரையாடி அவர்களை வழியனுப்பியும் வைத்தார்.
மாணவர்களுடன் மாநகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 5 ஆசிரியர்களும், ஒரு உதவிக் கல்வி அலுவலரும் உடன் செல்கின்றனர். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்து, தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றிற்கான செலவுகளை சென்னை மாநகராட்சி ஏற்கிறது. இந்த மாணவர்கள் 7 நாள் சுற்றுலாவை முடித்துக்கொண்டு வரும் 8 ஆம் தேதி சென்னை திரும்ப இருக்கின்றனர்.
இந்நிலையில் மேயர் பிரியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சுற்றுலா செல்லும் மாணவர்களை வழியனுப்பி வைத்ததாக குறிப்பிட்டுள்ளார் பிரியா. மேலும், மாணவர்களுடன் அவர் கலந்துரையாடும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
மற்ற செய்திகள்