'கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ்'... 'என்ன காரணம்'?... விளக்கமளித்த சென்னை மாநகராட்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. தற்போது அதற்கான விளக்கத்தைச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது,
தமிழகத்தில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதால் அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுகின்றனர். இவ்வாறு கண்காணிக்கப்படும் நபர்களின் வீடுகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், நோட்டீஸ் ஒட்டப்படுகிறது.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனின் வீட்டில் நேற்று இரவு கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்டது. சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள வீட்டில் மாநகராட்சி ஊழியர்கள் இந்த நோட்டீசை ஒட்டியுள்ளனர். அதில், கொரோனாவில் இருந்து எங்களைக் காக்க, சென்னையைக் காக்க, எங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளோம் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தவிவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசை அகற்றினர். இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ''கமலின் குடும்பத்தில் யாரோ ஒருவர் வெளிநாடு சென்று வந்ததால், அவரது பாஸ்போர்ட் முகவரியின் அடிப்படையில் அந்த வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. கமலின் பழைய முகவரி எனத் தெரியாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. முகவரியில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்த தவறு ஏற்பட்டுவிட்டது. இனிமேல் இதுபோன்ற தவறு நடைபெறாது'' என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.