‘பீனிக்ஸ்’ மாலுக்கு போன யாருக்காவது ‘கொரோனா’ பாதிப்பு இருக்கா..?.. சென்னை மாநகராட்சி ஆணையர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பீனிக்ஸ் மாலுடன் தொடர்புடைய 3200 பேரிடம் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்களில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ‘கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சென்னையில் 43 இடங்களில் பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த 43 இடங்களில் மொத்தம் 9 லட்சம் மக்கள் இருக்கின்றனர். தொடர்ந்து சென்னை முழுவதும் வீடு விடாக சென்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வில் யாருக்காவது கொரோனா இருப்பது கண்டறியப்பட்டால் அந்த பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.
சென்னையில் வீடு விடாக சென்று ஆய்வு மேற்கொள்ளும் பணியில் தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.15,000 வழங்கப்படும். 100 வீடுகளுக்கு ஒரு ஊழியர் என்ற வகையில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. மேலும் சென்னை பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்த இருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு சென்ற 3200 பேரை ஆய்வு செய்ததில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை’ என தெரிவித்துள்ளார்.