‘மூச்சு திணறல்’.. ‘24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு’.. கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மூதாட்டி குணமடைந்தது எப்படி..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னையை சேர்ந்த மூதாட்டி குணமடைந்தது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

‘மூச்சு திணறல்’.. ‘24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு’.. கொரோனா பாதிப்பில் இருந்து சென்னை மூதாட்டி குணமடைந்தது எப்படி..?

இதுதொடர்பாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்ட செய்திகுறிப்பில், ‘கடந்த 26.3.2020-ம் தேதி ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவர் மூச்சுத்திணறலுக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது மருத்துவக்குழுவால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையின் போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயும் இருந்தது. தற்போது பூரண குணமடைந்த அவர் நேற்று வீடு திரும்பியுள்ளார். மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி, மருத்துவமனைக் கண்காணிப்பாளர் நாராயணசாமி, டாக்டர் ரகுநந்தன் மற்றும் மருத்துவக்குழுக்கள், செவிலியர்கள் மூதாட்டிக்கு பழக்கூடை கொடுத்து வாழ்த்தினர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தெரிவித்த ராஜீவ்காந்தி மருத்துவமனையின் டீன் ஜெயந்தி, ‘சென்னையை சேர்ந்த 74 வயது மூதாட்டி மூச்சுத்திணறலுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் மூச்சுவிட மிகவும் சிரமப்பட்டார். அதோடு அவருக்கு ரத்த அழுத்தம், நீரழிவு நோயின் பாதிப்பும் அதிகளவில் இருந்தது. அதனால் அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தோம். 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பில் இருந்தார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்ததன் பலனாக அவருக்கு மூச்சுத்திணறல் படிபடியாக குறைந்தது. இதனை அடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. கடந்த 4 நாள்களாக வென்டிலேட்டர் உதவியில்லாமல் மூச்சுவிட்டார். பூரணமாக குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்ய முடிவு செய்தோம். மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது அனைவருக்கும் தேங்க்ஸ் என கூறிவிட்டு சென்றார்’ என தெரிவித்துள்ளார். வார்டில் இருந்து மூதாட்டி வெளியே வரும்போது மருத்துவர்கள் அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தி, சிரித்தமுகத்துடன் அனுப்பி வைத்தனர். அப்போது வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததற்காக, கடவுளுக்கும், டாக்டர்களுக்கும் நன்றி என மூதாட்டி தெரிவித்தார்.

News Credits: Vikatan