பாரம்பரியமிக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு, ‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், சென்னை ரயில் நிலையத்தின் பெயரை 'புரட்சித்தலைவர் டாக்டர் எம். ஜி. ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம்' என்று மாற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தத் தீர்மானம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 12 ஆம் தேதி அனுப்பப்பட்டது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் 6 ஆம் தேதி சென்னையை அடுத்த வண்டலூர் கிளாம்பாக்கத்தில், மக்களவைத் தேர்தலை ஒட்டி அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி, ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மத்திய ரயில் நிலையம் என்று இனி அழைக்கப்படும்’ என்று அறிவித்தார்.
மேலும் 'திரையுலகில் மட்டுமல்ல மக்களின் இதயங்களையும் வென்றவர் எம்.ஜி.ஆர்.. இலங்கை சென்றிருந்தபோது, அவர் பிறந்த இடத்தை பார்வையிட்டேன்' என்று நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 'பெயர் மாற்றம் செய்யத் தடையில்லை' என்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதையடுத்து பழமையான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று மாற்றி தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. இந்த மாற்றம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.