'டெய்லி ஒரு சைக்கிள் மிஸ்ஸிங்...' 'அதுவும் குறிப்பா 'அவங்க' வீட்டுல உள்ள சைக்கிள் தான் காணமால் போகுது...' - இதுக்கு பின்னாடி இருக்கும் அதிர வைக்கும் ஃப்ளாஸ்பேக்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காவல்துறையினரை பழிவாங்க காவலர் குடியிருப்புகளில் மட்டுமே சைக்கிள்கள் திருடி வந்த, சைக்கிள் திருடர்கள் போலீசாரிடம் வசமாக மாட்டியுள்ளனர்.
கடந்த சில வாரங்களாக எழும்பூர் காவலர் குடியிருப்பில் தினமும் ஒரு விலை உயர்ந்த சைக்கிள் என தொடர்ச்சியாக சைக்கிள்கள் திருடு போய் வந்ததால் காவலர் குடியிருப்பில் உள்ள காவலர்கள் எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் பெயரில் எழும்பூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இரண்டு நபர்கள் தினமும் காவலர் குடியிருப்புக்குள் வந்து சைக்கிளை திருடி செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. கொள்ளையர்களை பிடிக்க நேற்று நள்ளிரவு போலீசார் மஃப்டியில் எழும்பூர் காவலர் குடியிருப்பு பகுதியில் காத்திருந்தனர்.
எப்போதும் போல் சைக்கிள் திருட காவலர் குடியிருப்புக்குள் வந்த இருவர் சைக்கிளை திருடி விட்டு வெளியே வந்துள்ளனர். மஃப்டியில் இருந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சைக்கிள் திருட வந்தவர்கள் எம்.எல்.ஏ ஹாஸ்டலில் தண்ணீர் சப்ளை செய்யும் கதிர்(33) மற்றும் துறைமுக பகுதியில் லோடுமேனாக பணியாற்றி வரும் காஜா மொய்தீன்(38) எனவும் இவர்கள் இருவருமே தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் இருவரும் மது குடிப்பதில் நண்பர்களாக மாறியதாக தெரிவித்துள்ளனர்.
கொரோனா காரணமாக வேலையிழந்த காஜா மொய்தீன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு திருவல்லிக்கேணி காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறை சென்று வந்துள்ளார். அதன் பின்னரே காவல்துறையினரை பழிவாங்குவதற்காக காவலர் குடியிருப்பு பகுதிகளில் திருடுவதற்கு காஜா மொய்தீன் திட்டுமிட்டுள்ளார். அதற்கு தன் நண்பன் கதிரையும் துணைக்கு அழைத்துள்ளார்.
மேலும் திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள காவலர் குடியிருப்புகளில் தினந்தோறும் ஒரு சைக்கிளை திருடி அவற்றை குறைவான விலைக்கு விற்று வந்துள்ளனர். ரூபாய் 10,000 முதல் 15,000 விலை மதிப்பு கொண்ட சைக்கிள்களை திருடி அவற்றை ரூபாய் 500, 1000 என விற்று அந்த பணத்தில் இருவரும் மது குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்கள் கொள்ளையடித்த சைக்கிள்கள் குறித்து தகவல் சேமித்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறியுள்ளனர்.
மற்ற செய்திகள்