‘தாயுடன் தூங்கிக் கொண்டிருந்த’... ‘8 மாத பிஞ்சுக் குழந்தை’... ‘சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில்’... ‘நள்ளிரவில் நடந்த பரிதாபம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 8 மாத பெண் குழந்தை கடத்தப்பட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர் சினேகா(23). இவருக்கும் கும்பகோணத்தைச் சேர்ந்த பாட்ஷா(25) என்பவருக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 8 மாதத்தில் ராஜேஸ்வரி என்ற கைக்குழந்தை உள்ளது. பிழைப்புக்காக ஊர் ஊராகச் சென்று பாசி ஊசிமணி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்த இவர்கள், சென்னை பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து ஊசிமணி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று இரவு பெசன்ட் நகர் கடற்கரையில் உள்ள ஸ்கேட்டிங் போர்ட் மைதானத்தில் தனது கைக் குழந்தையுடன் சினேகா உறங்கிக் கொண்டு இருந்துள்ளார். அதிகாலை 3 மணிக்கு சினேகா தூக்கத்திலிருந்து எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தனது கணவர் தான் குழந்தையை எடுத்திருப்பார் என அவரிடம் கேட்டபோது அவர் எடுக்கவில்லை என கூறியுள்ளார். இதனால் தனது உறவினர்களுடன் கடற்கரை முழுவதும் குழந்தையைத் தேடி பார்த்தும் குழந்தை கிடைக்கவில்லை.
இதனால் குழந்தையின் தாய் சினேகா சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது ஒரு பெண் எட்டு மாத கைக்குழந்தையான ராஜேஸ்வரியைத் தூக்கிக் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதன் அடிப்படையில் குழந்தையைக் கடத்திய பெண் செல்லும் பாதையில் உள்ள அனைத்து சாலைகளிலும் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் குழந்தையின் புகைப்படத்தை அனுப்பி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதேபோல கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி மெரினாவில் பலூன் விற்பனை செய்து வரும் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தம்பதியின் 7 மாத கைகுழந்தையான ஜான் எந்த குழந்தையை சினிமாவில் நடிக்க வைப்பதாகக்கூறி பெண்ணொருவர் கடத்திய நிலையில், தற்போது பெண் குழந்தை கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.