‘சென்னையில்’ போலீஸாரிடமே வேலையைக் காட்டிய ‘பேங்க் மேனேஜர்’.. ‘போதையில்’ செய்த ‘வேற லெவல்’ காமெடி..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

போதையில் தனியார் வங்கி மேலாளர் ஒருவர் காவல் நிலையத்திலிருந்து காவலர் ஒருவருடைய இரு சக்கர வாகனத்தையே திருடிச் சென்றுள்ளார்.

‘சென்னையில்’ போலீஸாரிடமே வேலையைக் காட்டிய ‘பேங்க் மேனேஜர்’.. ‘போதையில்’ செய்த ‘வேற லெவல்’ காமெடி..

ஆலந்தூரைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் பரங்கிமலை ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். வெளியூர் சென்றிருந்த இவர் கிண்டி காவல் நிலையத்தில் நிறுத்தியிருந்த தனது இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அது காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது, டிப் டாப்பாக உடை அணிந்த ஒரு நபர் காவல் நிலையத்திற்குள் வந்து அருண்குமாருடைய இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிசிடிவி வீடியோவில் அந்த நபர் கையில் போக்குவரத்து காவலர்கள் கொடுக்கும் ரசீதுடன் இருப்பதை வைத்து காவலர்கள் அவர் யார் என விசாரித்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்ற நபர், நேற்று முன்தினம் மதுபோதையில் வாகனம் ஓட்டியதற்காக பிடிக்கப்பட்டதும், போக்குவரத்து காவலர்கள் அவருடைய இரு சக்கர வாகனம், லைசன்ஸ் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து அபராதம் கட்டிவிட்டு வாங்கிக்கொள்ளுமாறு கூறியதும் தெரியவந்துள்ளது. மேலும் அப்போது காவலர்களிடம் அவர் தனியார் வங்கி ஒன்றில் மேலாளராக வேலை செய்துவருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து லைசன்ஸில் இருந்த விவரங்களை வைத்துப் பார்த்ததில் அந்த நபர் புது பெருங்களத்தூரைச் சேர்ந்த அருண்ராஜ் (27) என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் அவருடைய வீட்டுக்கே சென்று விசாரித்த காவலர்களிடம் நடந்ததைக் கூறிய அருண்ராஜ், “25ஆம் தேதி இரவு என்னுடைய பல்சர் பைக்கில் மதுபோதையில் சென்றதால் பிடித்த கிண்டி போலீஸார், வண்டியைப் பறிமுதல் செய்துவிட்டு அபராதம் கட்டி எடுத்துச் செல்லுமாறி கூறினார்கள். ஆனால் வண்டி இல்லாமல் போனால் அம்மா திட்டுவார் என்பதால் நான் ஸ்டேஷனிலேயே சுற்றிக் கொண்டிருந்தேன். பின் அங்கு தனியாக நின்றுகொண்டிருந்த என் வண்டியை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு கிளம்பினேன்.

வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு பள்ளத்தில் தடுமாறி விழுந்ததில் பைக்கின் முன்பக்கம் பெண்டாகி ஓட்ட முடியவில்லை. இதையடுத்து என் நண்பர் மெக்கானிக் ஒருவரிடம் கொண்டுபோய் விட்டபோது தான் அது என்னுடைய பைக் இல்லையென தெரிந்தது. அந்த பைக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்றால் அம்மா திட்டுவார் என அதை தாம்பரம் ரயில் நிலைய ஸ்டாண்டில் வைத்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார். அருண்ராஜ் சொன்ன கதையைக் கேட்டு சிரித்த காவலர்கள் மதுபோதையில் வண்டி ஓட்டிவிட்டு, அபராதம் கட்டாமல் வண்டியை எடுத்துச் செல்ல முயன்றது, வேறு ஒருவர் வாகனத்தை மாற்றி எடுத்துச் சென்றது ஆகியவற்றிற்காக அவரைக் கைது செய்துள்ளனர்.

POLICE, CHENNAI, GIUNDY, BIKE, BANK, MANAGER