'அவன் தூங்கிட்டு இருக்கான்னு நம்புறாங்க'!.. மகன் உயிரிழந்தது கூட தெரியாமல்... 3 நாட்கள் சடலத்துடன் வீட்டில் தவித்த தாய்!.. கலங்கவைக்கும் பாசப் போராட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகன் உயிரிழந்ததுகூட தெரியாமல் 7 வயது மகனின் சடலத்துடன், வீட்டுக்குள் 3 நாட்கள் தாய் பரிதவித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆவடியை அடுத்த திருநின்றவூர், சி.டி.எச். சாலையை சேர்ந்தவர் சரஸ்வதி (வயது 35). இவருடைய மகன் சாமுவேல் (7). திருநின்றவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
சரஸ்வதியின் கணவர் ஜீவானந்தம், 7 ஆண்டுகளுக்கு முன்பு சரஸ்வதியை விட்டு பிரிந்து சென்று பெங்களூருவில் வசித்து வருகிறார். சரஸ்வதி, தனது மகனுடன் திருநின்றவூரில் உள்ள தனது சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சாமுவேலுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சரஸ்வதிக்கு வேலை இல்லை எனத் தெரிகிறது. இதனால், சாப்பாட்டுக்கு கூட பணம் இல்லாமல் வீட்டிலேயே மகனுடன் பரிதவித்து வந்தார். இதன் விளைவாக, அவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அக்கம் பக்கத்தினர் அவரது மகன் பற்றி கேட்டால், அவன் தூக்கிக்கொண்டு இருக்கிறான் என்று கூறியுள்ளார். சில தினங்களாக அருகில் இருந்தவர்களிடம்கூட பேசாமல், யாரிடமும் உதவி கேட்காமல் பசியால் மகனுடன் வீட்டுக்குள் இருந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை சரஸ்வதி, போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்புகொண்டு, "எனது மகனின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது" என்று தெரிவித்தார். இதையடுத்து திருநின்றவூர் போலீசார், சரஸ்வதி வீட்டுக்கு விரைந்து சென்றனர்.
வீட்டின் உள்ளே தரையில் அவரது மகன் சாமுவேல் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தான். அவனது உடல் அழுகிய நிலையில் இருந்ததால், அவன் இறந்து 3 நாட்கள் ஆகி இருக்கலாம் என தெரிகிறது. ஆனால், மகன் உயிரிழந்ததுகூட தெரியாமல் வீட்டுக்குள் மகனின் உடலுடன் சரஸ்வதி 3 நாட்கள் பரிதவித்து வந்துள்ளார்.
இதுபற்றி சரஸ்வதியிடம் போலீசார் விசாரித்தபோது, "3 நாட்களாக எனது மகனின் உடல் மீது எறும்புகள் ஊர்ந்தது. இன்று (அதாவது நேற்று) காலை அவனது உடலில் இருந்து துர்நாற்றம் வீசியதால் போலீசாரை அழைத்ததாக" கூறினார்.
திருநின்றவூர் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமுவேல் உடல்நல குறைவால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்