'ஆபீஸ்ல லீவு கொடுக்கல'... 'வாட்ஸ்ஆப்' மூலம் இளைஞர்கள் செய்த கொடூரம்'...சென்னையை கலங்கடித்த பீதி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் விடுமுறை கொடுக்க வேண்டும் என்பதற்காக இரு இளைஞர்கள் செய்த செயல் பலரைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்று யாரேனும் செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
கொரோனா எந்த அளவிற்குப் பரவுகிறதோ அதைவிட அதுகுறித்த போலியான தகவல் மற்றும் வதந்திகள் வேகமாகப் பரவுகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது. அதேபோன்று நேற்று முன்தினம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் ஒரு செய்தி வேகமாகப் பரவியது. பலரும் அதை உண்மை என நம்பி வேகமாகப் பலருக்கு ஷேர் செய்தார்கள்.
அந்த செய்தியில், ''பூந்தமல்லியில் உள்ள பொதுச்சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேர் உயிரிழந்து விட்டதாகவும், அதுகுறித்து போராட்டம் நடத்தப் போவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதோடு ஒரு செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் வேகமாகப் பரவ, அதுகுறித்து காவல்துறையின் கவனத்திற்குச் சென்றது. மக்கள் மத்தியில் பீதி ஏற்படாமல் தடுக்க விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் இந்த போலியான தகவலைப் பரவிய நபரைக் கைது செய்யத் தனிப்படை அமைத்தனர்.
அந்த தகவலிலிருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்ததில், அது காட்டுப்பக்கத்தைச் சேர்ந்த சிவகுமார் மற்றும் பெஞ்சமின் எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் அதிரடியாக கைது செய்த காவல்துறையினர், எதற்காக இதுபோன்ற போலியான தகவலைப் பரப்பினார்கள் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிவகுமார் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரபல கார் நிறுவனத்தில் பணி புரிந்து வருவதாகவும், பெஞ்சமின் கார்களை வாங்கி விற்பனை செய்து வரும் தொழில் செய்து வருவதாகவும் கூறினர்.
தற்போது கொரோனா குறித்த அச்சத்தினால் பல நிறுவனங்கள் விடுமுறை மற்றும் வீட்டிலிருந்து பணி புரிய அனுமதி அளித்துள்ள நிலையில், சிவகுமார் பணிபுரியும் நிறுவனம் விடுமுறை அளிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்ற போலியான தகவலைப் பரப்பியதாகத் தெரிவித்துள்ளார்கள். இதனிடையே இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், இதுபோன்று மக்களைப் பீதி அடையச் செய்தும் போலியான தகவல்களைச் சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்கள்.