'காட்டு விலங்க புடிக்க வெச்சிருந்த 'வெடிகுண்ட'... 'பழம்'ன்னு நினைச்சு கடிச்சிருக்கான்...' - சிறுவனுக்கு நிகழ்ந்த 'கலங்கடிக்கும்' சோகம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த மேல்கரியமங்கலம் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களிலும், வனப்பகுதிகளிலும் வன விலங்குகள் அதிகமாக வருவதால் அதனை வேட்டையாட வேண்டி அப்பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், வனப்பகுதி அருகே அமைந்துள்ள விவசாய நிலத்தில் விளையாட வேண்டி கமலக்கண்ணன் என்பவரின் 7 வயது மகன் தீபக் தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு தீபக் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது வனப்பகுதி அருகே கிடந்த நாட்டு வெடிகுண்டை பழம் என நினைத்து கடித்துள்ளதாக தெரிகிறது.
அப்போது திடீரென வெடித்த வெடிகுண்டால் ஏற்பட்ட விபத்தின் காரணமாக சிறுவன் தீபக்கின் தாடைப்பகுதி மற்றும் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிறுவனுக்கு தீவிர வருகிறது.
பின்னர், இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டு கும்பல் யார் என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். முன்னதாக, சில மாதங்களுக்கு முன் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தை உண்டு உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Image : Representational
மற்ற செய்திகள்