'ஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ்'...'எங்க மனசுக்கு ரொம்ப நெருக்கம்'... நெகிழ்ச்சியில் பயணிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தென் மாவட்ட மக்களின் இதயங்களோடு ஒன்றாகி போன ரயில் தான் பாண்டியன் எக்ஸ்பிரஸ். அது தனது ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவினை கோலாகலமாக கொண்டாடியது.
50 ஆண்டுகளுக்கு முன்னர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி போன்ற நகரங்களில் இருந்து சென்னைக்கு வருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த நேரத்தில் தென் மாவட்ட மக்களின் பயணத்திற்கு முக்கிய ஆதாரமாக விளங்கிய ரயில் தான் பாண்டியன் எக்ஸ்பிரஸ். இது 1969ம் ஆண்டு மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது.
18 பெட்டிகளுடன் பகலில் இயங்கிய அந்த ரயிலில் தான் பல தென் மாவட்ட மக்கள் தங்களின் சென்னை பயணத்தை மேற்கொண்டார்கள். இதனால் தென் மாவட்டங்களில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் மிகவும் பிரபலம். அன்றாடம் பயணம் செய்யும் பயணிகள் முதல், பல பிரபல அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்த ரயிலில் பயணம் செய்துள்ளார்கள். தற்போது மதுரையில் இருந்து இரவில் புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலையில் சென்னைக்கு வந்தடைகிறது.
இந்நிலையில் பாண்டியன் விரைவு ரயில் இயக்கப்பட்டு 50வது ஆண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதற்காக பாண்டியன் விரைவு ரயில் போன்று மிகப்பெரிய அளவிலான கேக் ஒன்றையும் தயார் செய்து அதை ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.