'கர்மா இஸ் எ பூமராங்' ...'பாபநாசம் பட பாணியில்'... 'ரியல் கிரைம் த்ரில்லர்'... அதிரவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பாபநாசம் திரைப்பட பாணியில் இறந்த ஒருவரை குடும்பமே சேர்த்து புதைத்தது 7 வருடத்திற்கு பின்பு தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'கர்மா இஸ் எ பூமராங்' ...'பாபநாசம் பட பாணியில்'... 'ரியல் கிரைம் த்ரில்லர்'... அதிரவைக்கும் சம்பவம்!

நெல்லை மாவட்டம் சிவகிரியைச் சேர்ந்தவர் மன்னார். இவர்  கடந்த 2012ஆம் ஆ‌ண்டு ஜனவரி 7ஆம் தேதி, தனது உறவினர் கந்தனின் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். ஆனால் வயலுக்கு சென்ற கணவன் காணாமல் போனதால், அவரது மனைவி மேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் வழக்கில் முன்னேற்றம் இல்லாததால், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.

இதையடுத்து தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேரி ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் மன்னார் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து வழக்கை விசாரிக்க தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள் மன்னாருக்கு யாருடனாவது பிரச்சனை இருந்ததா என்பது குறித்து ஆராய்ந்தார்கள். ஆனால் அதுபோன்று  எந்த பிரச்சனையும் அவருக்கு இல்லை என்பது தெரியவந்தது.

சம்பவத்தன்று மன்னார் வயலுக்கு சென்றதை அந்த கிராமத்து பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளார்கள். ஆனால் மன்னார் திரும்பி வீட்டிற்கு செல்லவில்லை. எனவே வயலை சுற்றியுள்ள இடத்தில் தான் அவருக்கு ஏதாவது நிகழ்ந்திருக்க வேண்டும் என அதிகாரிகள் முடிவு செய்தார்கள். வயலை சுற்றியுள்ள பகுதிகளில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் நடந்துள்ளனவா என்பது குறித்து, தீவிர விசாரணையில் சிபிசிஐடி அதிகாரிகள் இறங்கினார்கள். அவர்கள் எடுத்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. 

வருடந்தோறும் மன்னார் இறந்த ஜனவரி 7ஆம் தேதி கந்தன் வயலுக்கு அருகேயுள்ள கரும்புத் தோட்டத்தில், சிறப்பு பூஜை நடத்தப்படுவது சிபிசிஐடி அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து கரும்புத் தோட்டத்தின் உரிமையாளர்களிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டார்கள். அப்போது மன்னார் மயமானது குறித்த அதிரவைக்கும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.

கரும்பு தோட்டத்தை நடத்தி வரும் பன்னீர் என்பவர், வனவிலங்குகள் அங்கு நுழைவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருந்தார். மின் கம்பியில் இருந்து மின்சாரத்தை திருடி வேலியுடன் இணைத்திருந்தார். ஆனால் இதுகுறித்து எதுவும் அறியாத மன்னார், இரவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்தபோது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத பன்னீர் குடும்பத்தினர், சட்ட விரோதமாக அமைத்த மின்வேலியல் மன்னார் உயிரிழந்தது வெளியே தெரிந்தால் நிச்சயம் ஜெயிலுக்கு போக நேரிடும். எனேவ அதிலிருந்து தப்ப முடிவு செய்த பன்னீர், அவரது மனைவி பாப்பா மற்றும் மருமகன் பாலகுரு ஆகியோர் தங்களது கரும்புத் தோட்டத்திலேயே மன்னாரின் உடலை புதைத்து விட்டனர். இதுகுறித்து யாரும் அறியாததால், மன்னார் காணாமல் போனதாகவே அனைவரும் நம்பி கொண்டிருந்தார்கள்.இந்த நிலையில் தனது வயலில் மன்னார் உயிரிழந்ததையும் அவரது உடலை அங்கு புதைத்ததையும் எண்ணி பன்னீர் குற்ற உணர்ச்சியில் இருந்துள்ளார்.

இதனால் மன்னார் உயிரிழந்த ஜனவரி 7ஆம் தேதி, பாவத்தை போக்குவதற்காக பரிகார புஜையை வருடந்தோறும் செய்து வந்துள்ளார். இருந்தபோதும் தொடர்ந்து மனஉளைச்சலில் இருந்த அவர், இறந்தும் போனார். இதற்கிடையே மன்னார் காணாமல் போன வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மையை கண்டறிந்த சிபிசிஐடி அதிகாரிகள் பன்னீரின் மனைவி பாப்பா மற்றும் அவரது மருமகன் பாலகுரு ‌ஆகியோரை கைது செய்தனர்.

MURDER, KILLED, TAMILNADUPOLICE, CBCID, PAPANASAM MOVIE