'செக் பண்ணிட்டு போக வந்தாரு'... 'ஆலைக்கு வந்த தொழிலதிபர்'... இரவில் நடந்து முடிந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இரவில் தனியாக ஆலைக்கு வந்த தொழில் அதிபர், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'செக் பண்ணிட்டு போக வந்தாரு'... 'ஆலைக்கு வந்த தொழிலதிபர்'... இரவில் நடந்து முடிந்த சோகம்!

திருப்பூர் மங்கலத்தை அடுத்த குட்டைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவருடைய மனைவி ராதிகா. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். தொழிலதிபரான பாலசுப்பிரமணியத்திற்கு அதே பகுதியில் சொந்தமாக கல் உடைக்கும் ஆலை உள்ளது. இதன் அருகே பாறைக்குழி உள்ளது. 80 அடி ஆழம் கொண்ட பாறைக்குழியில், 20அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

இவருடைய கல் உடைக்கும் ஆலையில் 16 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல் உடைக்கும் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் பணி முடிந்ததும் வீட்டுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் நேற்று காலை தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்தனர். அப்போது கல் உடைக்கும் ஆலைக்கு அருகே உள்ள பாறைக்குழியில் பாலசுப்பிரமணியத்தின் கார் தண்ணீரில் மூழ்கியபடி கிடந்ததை பார்த்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

இதுகுறித்து உடனடியாக அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்கள். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், பொக்லைன் எந்திரம் மூலம் பாறைக்குழி தண்ணீருக்குள் மூழ்கி கிடந்த காரை மீட்டனர். அப்போது காருக்குள் பாலசுப்பிரமணியம் உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். பாலசுப்பிரமணியம் எப்படி உயிரிழந்தார் என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் தீவிரப்படுத்தினார்கள்.

விசாரணையில் ''பாலசுப்பிரமணியத்தின் மனைவி ராதிகா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு ராக்கியபாளையத்தில் உள்ள தாய் வீட்டிற்கு நேற்று முன்தினம் காலையில் சென்றுள்ளார். இதனால் வீ்ட்டில் தனியாக இருந்த பாலசுப்பிரணியம் அன்று இரவு 8 மணிக்கு கல் உடைக்கும் ஆலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரும் வெளியேறி விட்டார்களா? என பார்வையிட, காரை எடுத்துக்கொண்டு அங்கு சென்றுள்ளார்.

அப்போது பாலசுப்பிரமணியத்தின் கார், கல் உடைக்கும் ஆலை அருகே உள்ள பாறைக்குழி ஓரமாக சென்றுள்ளது. அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார், பாறைக்குழிக்குள் பாய்ந்துள்ளது. இதனால் காருடன் தண்ணீரில் மூழ்கி் பாலசுப்பிரமணியம் இறந்து இருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பாறைக்குழிக்குள் தொழிலதிபர் விழுந்து இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ACCIDENT, BUSINESSMAN, RAMS, ROCK PIT, TIRUPUR