வேலூர் நகை கடை கொள்ளை... சிசிடிவி கேமராவில் ஸ்பிரே.. சுவர் ஓரத்தில் 'விக்'.. எப்படி நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலூரில் பிரபல நகை கடை ஒன்றில் திருடர்கள் 15 கிலோ எடை உள்ள தங்கம், வைரம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனால், அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் காட்பாடி சாலையில் பிரபல நகைக்கடை அமைந்துள்ளது. இந்தக் கடை ஐந்து மாடிகள் கொண்ட கட்டடத்தில் தரைத்தளம், முதல் தளம் ஆகியவற்றில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தின் 5-வது மாடியில் நகைக்கடை ஊழியர்கள் வசித்து வருகிறார்கள். கட்டடத்துக்கும் நகைக்கடைக்கும் இரவு நேர பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் இருந்துள்ளார்கள்.
ஆனால், புதன்கிழமை இரவில் திருடர்கள் கடையின் பின் பக்க சுவரில் துளையிட்டு திருடிவிட்டு அதே வழியில் தப்பிச் சென்றுள்ளனர் எனப் போலீஸார் கூறுகின்றனர். திருட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார் கடையில் இருந்து சுமார் 15 கிலோ தங்கம் மற்றும் வைரம் நகைகள் திருடு போயுள்ளதாகக் கூறுகின்றனர். மேலும் இவற்றின் மதிப்பு சுமார் 7 கோடி ரூபாய் வரையில் இருக்குமாம்.
கொள்ளையில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்கும் நோக்கில் சிசிடிவி கேமிராக்கள் சோதனை செய்யப்பட்டது. ஆனால், ஒரே ஒரு கொள்ளையன் நகைக் கடைக்குள் நுழைந்ததுமே அனைத்து சிசிடிவி கேமிராக்கள் மீதும் தான் கொண்டு வந்த ஸ்ப்ரே பெயின்டை அடித்துவிட்டதால் திருட்டு காட்சிகள் பதிவாகவில்லை. என்றாலும் நகைக்கடையைச் சுற்றி அமைந்துள்ள சாலைகள், பக்கத்து கட்டடங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி-க்கள் மூலம் விசாரணை நடந்து வருகிறது.
உள்ளூர் கொள்ளையர்களா அல்லது வடமாநில கொள்ளையர்களின் கைவரிசையா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நகைக்கடை மதில் சுவரை ஒட்டி ஒரு தலைமுடி 'விக்' கிடந்துள்ளது. இதை வைத்தும் விசாரணை நடைபெறுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்