'எஃப்.எம். ரேடியோ...' 'ஜெலட்டின் குண்டு...' 'ஆன் பண்ண உடனே...' 'பூம்...' 'சேலம்' அருகே 'அதிர' வைத்த 'படுகொலை...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அடுத்த பனமரத்துபட்டியில் எப்.எம்.ரேடியோவில் எலக்ட்ரானிக் வெடிகுண்டு வைத்து அண்ணனே, தம்பியை கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் அருகே உள்ள தும்பல்பட்டி பகுதியை சேர்ந்தவர் 59 வயது விவசாயி மணி. இவர் கடந்த 17ஆம் தேதி தனது விவசாய தோட்டத்துக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் வெள்ளை நிற கைப்பை ஒன்று கிடந்துள்ளது.
அதில் எப்.எம் ரேடியோ, மிக்சர் பாக்கெட் மற்றும் மது பாட்டில்கள் போன்றவை இருந்துள்ளன. இதனைக் கண்ட மணி யாரோ குடிமகன் தவற விட்டு சென்றுவிட்டதாக நினைத்து அவற்றை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு எஃப்.எம். ரேடியோவை ஆன் செய்துள்ளார்.
அடுத்த நொடி அந்த ரேடியோ பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் உடல் சிதறி பலியானார். வீட்டின் மேற்கூறை மற்றும் ஜன்னல் உடைந்து சிதறியதில் மணியின் வீட்டிலிருந்த அவரது பேத்தி, உறவினர்கள் வசந்த குமார், நடேசன் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், பலியான மணியின் அண்ணன் செங்கோடன் என்பவர் கடந்த மூன்று நாட்கள் முன்பு அவரது வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பிய செங்கோடனை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்த போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
இதில் விவசாயி மணியின் மரணத்துக்கு அவர்தான் காரணம் என்பது தெரியவந்தது. நிலத்தகராறு காரணமாக அண்ணன் தம்பிக்கிடையே பிரச்சனை இருந்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த செங்கோடன் இந்த கொலை முடிவை எடுத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாமகிரிப்பேட்டை சென்று அங்குள்ள வெடி பொருட்கள் விற்கும் கடையில் கிணறு வெட்டுவதற்காக என்று டெட்டனேட்டர்களையும், ஜெலட்டின் குச்சிகளையும் வாங்கியுள்ளார். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே கடை ஒன்றில் எப்.எம். ரேடியோ ஒன்றை 900 ரூபாய்க்கு வாங்கியுள்ளார். வீட்டுக்கு வந்து, பின்னர், எலக்ட்ரிகல் பணியில் முன் அனுபவம் உள்ள செங்கோடன் எப்எம் ரேடியோவை கழற்றி அதற்குள் ஜெலட்டின் குச்சியை டெட்டனேட்டருடன் இணைத்து எப்.எம் ரேடியோவை ஆன் செய்தால் அது வெடிக்கும் வகையில் அதனை ஒரு எலக்ட்ரானிக் வெடிகுண்டு போல தயார் செய்துள்ளார்.
வெடிபொருட்கள் பொறுத்தப்பட்ட எப்.எம்.ரேடியோவை ஒரு பையில் வைத்து மது பாட்டில் மற்றும் நொறுக்குத் தீனி பாக்கெட்டுக்களையும் போட்டு எடுத்துக்கொண்டு மணியின் தோட்டத்துக்குள் கடந்த 17ஆம் தேதி வீசி சென்று உள்ளார்.
செங்கோடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின்குச்சிகளை விற்பனை செய்த நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி முருகன் என்பவரையும், எப்எம் ரேடியோ விற்ற கடைக்காரரும் கைது செய்யப்பட உள்ளதாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கனிக்கர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்