'சொல்லிக்கிட்டே இருக்கேன்! அடங்க மாட்ட?'... ரிப்போர்ட்டரின் போனை பிடுங்கி பாக்கெட்டில் போட்ட பிரதமர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன்னிடம் பேட்டி எடுத்த நிருபர் ஒருவரின் மொபைல் போனை பிடுங்கி, தனது பாக்கெட்டில் போட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியான பழமைவாத கட்சிக்கும், எதிர்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் பிரிட்டனில் நாடாளுமன்றத் தேர்தல் சூடுபிடித்து வருகிறது. இதன் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெறித்தனமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அவரை செய்தியாளர்கள் சந்தித்து கேள்விகளைக் கேட்டுள்ளனர். அவர்களுள் ஜோ பைக் என்ற நிருபர் போரிஸ் ஜான்ஸனை துருவித்துருவிக் கேள்வி கேட்டுள்ளார். குறிப்பாக லண்டன் மருத்துவமனையில் போதிய இடம் இல்லாததால், உடல் நலம் குன்றிய 4 வயது சிறுவன் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தது பற்றிய கேள்வியை எழுப்பியதோடு, தனது மொபைலில் அந்த சம்பவத்தின் புகைப்படத்தையும் காட்டுவதற்காக முயற்சித்தார்.
ஆனால் பார்க்க மறுத்த பிரதமர் போரிஸ், அந்த நிலைமை விரைவில் சீர் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைதியாய் கூறினார். ஆனால் விடாத ஜோ பை, பிரதமரை நோக்கி, ‘நீங்கள் அந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?’ என நோண்டினார். பிரதமரோ, ‘இன்னும் இல்லை. நேரம் கிடைக்கும்போது பார்க்கிறேன்’என்று கூற, உடனே ஜோ, ‘இதோ பாருங்கள்’ என கூறி தனது மொபைலில் உள்ள புகைப்படத்தை பிரதமரிடம் காட்ட முயற்சித்தார்.
ஆனால் அப்போது கடுப்பான பிரதமர், ஜோவின் போனை பிடுங்கி தனது பைக்குள் போட்டுக்கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகிவரும் நிலையில், பிரதமரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.