'டாக்டர் ஆகி திரும்பி வருவான்னு நெனச்சோம்'... 'இப்படி கார்கோ பிளைட்ல உடல் மட்டும் வரும்ன்னு சத்தியமா நினைக்கல'... கதறிய பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு ரஷ்யா சென்ற மாணவர்கள், இறந்த உடலோடு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'டாக்டர் ஆகி திரும்பி வருவான்னு நெனச்சோம்'... 'இப்படி கார்கோ பிளைட்ல உடல் மட்டும் வரும்ன்னு சத்தியமா நினைக்கல'... கதறிய பெற்றோர்!

ரஷ்யாவின் உள்ள புகழ்பெற்ற வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக்கழகத்தில் சென்னையைச் சேர்ந்த ஸ்டீபன் லீபக், கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த ராமு விக்னேஷ், திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த முகமது ஆசிக், சேலத்தைச் சேர்ந்த மனோஜ் ஆனந்த் ஆகிய மாணவர்கள் படித்து வந்தார்கள். இந்நிலையில் கடந்த 8-ந்தேதி நண்பர்கள் 4 பேரும் அங்குள்ள வோல்கா ஆற்றில் குளிக்கச் சென்றார்கள். அப்போது எதிர்பாராத விதமாக மாணவர் ஒருவர் ஆற்றில் மூழ்க அவரை காப்பாற்ற மற்ற மாணவர்கள் முயற்சிக்க, 4 பேரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

பல கனவுகளோடு ரஷ்யாவிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தங்களது மகன்கள் இறந்த துயரம் அவரது பெற்றோர்களை நிலைகுலையச் செய்தது. இதையடுத்து 4 மாணவர்களின் உடல்களை உடனே தமிழகம் கொண்டு வரத் தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பலியான மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய வெளியுறவுத்துறைக்குக் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் தமிழக மருத்துவ மாணவர்களின் உடல்களை உடனடியாக தமிழகத்துக்குக் கொண்டுவர ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் ஆவண செய்வதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்திய வெளியுறவுத்துறை எடுத்த முயற்சியின் பயனாக 4 மாணவர்களின் உடல்கள் ரஷ்யாவில் இருந்து துருக்கி நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டன. துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு வரும் துருக்கீஸ் ஏர்லைன்ஸ் கார்கோ விமானம் மூலம் நேற்று மாலை 4 மணிக்கு மாணவர்களின் உடல்கள் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. சென்னையில் உள்ள பழைய விமான நிலைய வளாகத்தில் கார்கோ அலுவலகத்துக்கு 4 மாணவர்களின் உடல்கள் கொண்டு வரப்பட்டன. தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் தமிழர் நல ஆணையரகத்தின் சார்பில் உடல்கள் பெறப்பட்டன.

Bodies of 4 TN medical students who drowned in Russia reach Chennai

பின்னர் இறந்த 4 மாணவர்களின் குடியுரிமை சுங்க இலாகா, போலீஸ் துறை சோதனைகள் முடிக்கப்பட்டு அதற்கான சான்றுகள் வழங்கப்பட்டது. அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டு அனைத்து சான்றுகளும் வழங்கப்பட்ட பின்னர் 4 பேரின் உடல்களை அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உடல்களைப் பெற்றுக் கொண்ட பெற்றோர் கதறி அழுதார்கள். மருத்துவர் ஆகித் திரும்பி வருவானென்று நினைத்தோம், இப்படி இறந்த உடலா திரும்பி வந்து இருக்கிறானே எனப் பெற்றோர்கள் கதறித் துடித்தார்கள்.

ஒவ்வொரு உடலும் தனித்தனி ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு மாணவர்களின் வீடுகளுக்குத் தமிழக அரசின் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் நலத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பல கனவுகளோடு சென்ற மாணவர்கள் சடலமாகத் திரும்பி வந்துள்ள சம்பவம் மாணவர்களின் குடும்பத்தை மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்