'ராகுல் அப்படி பேசினது அயோக்கியத் தனம்.. வயநாடுக்கு ஓடிவந்தவரு'.. பாஜக வேட்பாளர் எச்.ராஜா! பிரத்யேக பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடாளுமன்றத் தேர்தல் வேளையில், தமிழக பாஜக தலைவர்களுள் முக்கியமானவரான பாஜக சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் எச்.ராஜா பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்யேக பேட்டியை இங்கே படிக்கலாம்.
கார்த்திக் சிதம்பரத்தை விட நீங்கள் சிறந்த வேட்பாளர் என எப்படி நிறுவுகிறீர்கள்?
கார்த்திக் சிதம்பரம் வேட்பாளருக்கே தகுதியானவரா? அவருக்கு எதிராக பணப்பரிவர்த்தனை மோசடி நிகழ்ந்த ஆதாரங்கள் உள்ளன. ஜெயிலுக்கு சென்றுவந்து பெயிலுக்காக மொத்த குடும்பமும் இறைஞ்சுகின்ற ஒருவர் வேட்பாளராக நிற்கவே தகுதியானவரா? சிதம்பரங்களைப் பற்றிய சிதம்பர ரகசியமே அவர்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அல்ல. இவர் எம்.பியாக இருந்தபோது இருந்த, 11 டெக்ஸ்டைல் இண்டஸ்ட்ரிக்களே இப்போது இல்லை. அவர் தொகுதி பிரச்சனைகளை கவனிக்கவில்லை. அவர் மக்கள் பிரதிநிதிக்கே தகுதியானவரே இல்லை.
ஆனால் கடந்த 5 வருடமாக அதிமுகவைச் சேர்ந்தவர்தான் எம்.பியாக இருந்த பி.ஆர்.செந்தில்நாதன் பெரிய மாற்றத்தை உருவாக்கவில்லையே?
மக்களின் புரிதலில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் செய்துள்ளார். 2009ல் ஒரு கிராமத்துக்குச் சென்ற ப.சிதம்பரத்திடம் அக்கிராம பஞ்சாயத்தை சேர்ந்த மக்கள் குடிநீர் கேட்டதற்கு, ‘நான் என்ன டெல்லியில இருந்து ஃபிளைட்லயா தண்ணி கொண்டுவர முடியும்’ என்று சொன்னவர். ஆனால் ஒரு எம்.பி உள்ளூர் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து செய்ய முடியுமே!
கூட்டணியில் நீங்கள் இந்த தொகுதியில்(சிவகங்கை) நிற்கிறீர்கள். ஆனால் செந்தில்நாதனை விடவும் நீங்கள் எவ்வகையில் சிறந்த வேட்பாளர் என மக்கள் முன் நிறுவுகிறீர்கள்?
அதை நானே சொல்ல முடியாது. அதிமுக 37 சீட்கள் வைத்திருந்தது. ஆனால் கூட்டணிக்கு 17 சீட்களை பகிர்ந்துவிட்டு, தான் 20 தொகுதிகளில் நிற்கிறது. அப்படித்தான் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி இது. இந்த லாஜிக் புரிந்தால் சரி. ஆனால் செந்தில்நாதனுக்கு இந்த தொகுதி கொடுக்காமல் எனக்கு கொடுக்கிறார்கள் என்றால் அது தலைமை செய்யும் முடிவு.
உங்கள் பிரச்சாரத்தில் நான் ஆணையிட்டால் உள்ளிட்ட எம்ஜிஆர் பாடல்கள் பயன்படுத்தப்படுகிறதே?
திமுக தலைவர்களை பற்றியும் நாங்கள் இணக்கமாக பேசியுள்ளோம். அந்த பாடல்களை பயன்படுத்துவதில் என்ன தவறு.
பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்னும் வரவில்லை. ஆனால் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எப்படி பார்க்கிறீர்கள்? ஆனால் அதில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஒவ்வாத அறிக்கைகளும் உள்ளன.
பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தும் கூட, ஒரு மாநில கட்சியின் தேர்தல் அறிக்கையில் உள்ள சிலவற்றை அவர்களே செயல்படுத்த முடியும். சிலவற்றை டெல்லி தலைமை கூட்டணியின் உதவியுடன் செயல்படுத்தும். ஆனால் 100 சதவீதம் கருத்து உடன்பாடு இல்லாததால், தனித்தனி கட்சிகள் கூட்டணி வைத்து பொதுவான தேவைகளை தீர்க்க முற்படுகின்றன.
சிறுபான்மையினர் மதம் மாறுவது பாஜகவின் சித்தாந்தத்துடன் முரண்படுகிறது. ஆனாலும் அவர்களின் சலுகைகள் பறிக்கப்பட கூடாது என அதிமுக தேர்தல் அறிக்கை கூறுகிறது?
நீங்கள் உங்கள் மனைவியை அடிப்பதை நிறுத்திவிட்டீர்களா? அந்த சிக்கல்கள் வரும்பொழுது, பொதுவெளியில் என்ன முடிவு செய்கிறோம் என்பதை பார்க்கலாம். இந்த கேள்விகள் இப்போது வேண்டாம்.
சௌகிதார் என்கிற புதுமுயற்சி மக்கள் மத்தியில் எடுபடுகிறதா?
ராகுல் காந்தி சௌகிதார் சோர்ஹே என்று பேசியுள்ளார். அதைவிட அயோக்கியத்தனம் இல்லை. மெச்சூரிட்டி இல்லாமல் வடக்கில் இருந்து வயநாடுக்கு ஓடியவர் அவர்.
கார்த்திக் சிதம்பரத்தின் குடும்பம், கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பது பற்றி பேசினீர்கள். ஆனால்அவர் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கும்போது அவர் வேட்பாளராக நிற்கிறார். இப்படிதான் 2ஜி சமயத்தின்போது ஆ.ராசா மீதும் இதே குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. ஆக, இந்த குற்றச்சாட்டுகளை நினைவுபடுத்தி ஓட்டைப் பிரிப்பது உங்கள் நோக்கமா?
பணமோசடியை செய்தால், இந்த குற்றச்சாட்டுகள் விவாதத்துக்கு வரும்தான். 18 முறை நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கை சந்தித்து வரும் வேட்பாளரைப் பற்றிய புரிதலை மக்கள் முன் வைக்கிறேன். மக்களின் வழிபாட்டு உரிமைக்காக குரல்கொடுத்ததால் என் மீது இருக்கும் வழக்கு கிரிமினல் குற்றமா? அதை நான் பெருமையாகவே சொல்கிறேன்.
ராமர் கோயில், வேலைவாய்ப்பு, விவசாயிகளின் வருமானம் உள்ளிட்ட கடந்த தேர்தல் அறிக்கையை பாஜக நிறைவேற்றியதா?
ராமர் கோயில் விவகாரம் நீதிமன்றத்தில் இருந்து இன்னும் சுமுகத்துக்கு வரவில்லை. நீதிமன்றம் இதை இழுத்துக்கொண்டிருக்கிறது. 7 கோடிக்கும் மேல் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. முத்ரா கடன் வசதியில் 7 கோடி பேர் பயனடைந்துள்ளார்கள். எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி ரிப்போர்ட்படி 2007ன்படி திமுக-காங்கிரஸ் கூட்டணி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் 16 வகையான உணவுப்பொருட்களுக்கு 1.5% முதல் 1.96% வரை உயர்த்தி விலை நிர்ணயம் செய்துள்ளோம். விவசாயிகளின் உற்பத்தியும், கொள்முதலும் அதிகப்படுத்தியுள்ளோம். மானியங்களை வங்கிகள் மூலமாக வறுமைக்கோட்டுக்குக் கீழ் கொடுக்கப்படும் திட்டம் தோல்வி திட்டம் என மன்மோகன் சிங்கே ஒப்புகொண்டார். ஆனால் நாங்கள் ஸீரோ பேலன்ஸில் அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கி, வருமானவரிக்கான உச்சரவம்பு விகிதத்தை குறைத்துள்ளோம். பாஜக எப்போதுமே ஆதாரத்தை உறுதி செய்துவிட்டுத்தான் திட்டத்தையே போடும். நதிநீர் இணைப்பு, திறன் மேம்பாட்டுத் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்டவைதான் எனது அறிக்கைகளின் முதன்மை கூறுகள்.