ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் ராணுவ உயர் அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு இன்று (08.12.2021) ராணுவ உயர் அதிகாரிகளுக்கான கூட்டம் நடைபெற இருந்தது. இதில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் (Bipin Rawat), அவரது மனைவி மற்றும் 4 பைலட்டுகள் உட்பட 14 பேர், கோவை மாவட்டம் சூலூரில் உள்ள ராணுவ விமானப்படை தளத்தில் இருந்து 11:30 மணியளவில் ஹெலிகாப்டரில் கிளம்பினர்.
குன்னூர் மலைப்பாதையில் உள்ள காட்டேரி பள்ளத்தாக்கிற்கு மேலே ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்த போது கடுமையான மேகமூட்டம் நிலவியுள்ளது. இதனால் ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக ஹெலிகாப்டர் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் Mi-17V5 ரகத்தை சேர்ந்தது. ரஷிய நிறுவனமான கசன் ஹெலிகாப்டர்ஸிடமிருந்து இந்தியா இதை வாங்கியது. உலகில் இருக்கும் அதிநவீன ஹெலிகாப்டரில் இதுவும் ஒன்று. தீயணைப்பு பணி, கண்காணிப்பு, மீட்புப்பணி உள்ளிட்ட அனைத்துக்கும் இதனை பயன்படுத்த முடியும். கடுமையான மழை பெய்யும் பொழுது, கடற்பகுதி, பாலைவனம் ஆகியவற்றில் கூட இந்த ரக ஹெலிகாப்டர்கள் சிறப்பாக பறக்கும் தன்மை கொண்டவை.
இந்த ஹெலிகாப்டரில் போம் பாலியுரேதேன் எனும் வேதிப்பொருள், எரிபொருள் டேங்கில் நிரப்பப்பட்டிருக்கும். இது ஹெலிகாப்டரில் தீ விபத்து ஏற்படும் பொழுது பெரிதாக விபத்து ஏற்படாமல் தடுத்துவிடும். அப்படி உள்ள சூழலில் இந்த விமானம் வெடித்து சிதறியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விமானம் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என விமானிக்கு தெரியவந்தால் ‘Mayday Call’ என்னும் அவசர அழைப்பை செய்வார். Mayday Call என்பது ஒரு விமானம் அதிகபட்ச ஆபத்தில் இருக்கும் போது உதவிக்காக இதை அழைப்பார்கள். விமானி இப்படி கூறினால் அருகில் இருக்கும் அனைத்து விமான நிலையங்களும், இந்த விமானத்தை எப்படியாவது பத்திரமாக தரையிறக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்படும். அதனால் இந்த விமானம் தரையிறங்கவே அனைத்து முன்னுரிமைகளும் வழங்கப்படும்.
உலக அளவில் இந்த முறைதான் பயன்படுத்தபடுகிறது. இதை இந்த ஹெலிகாப்டர் விபத்தில் விமானி உபயோகித்தார் என கேள்வி எழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் இருக்கும் பிளாக் பாக்ஸ் கைப்பற்றப்பட்ட பின் இதுகுறித்த தகவல் தெரிய வரும் என கூறப்படுகிறது.
மற்ற செய்திகள்