‘1 லட்சத்துக்கும் அதிகமான பைக்தான் டார்கெட்’!.. ‘ஹெல்மெட்டோட தான் வருவாங்க’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை துரைப்பாக்கத்தை சேர்ந்த ஐடி ஊழியர் ஒருவர் தனது பைக் திருடு போய்விட்டதாக கடந்த நவம்பர் மாதம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் ஆட்டோவில் வந்த நபர்கள் பைக்கை திருடிச் சென்றதாக சிசிடிவி வீடியோ ஒன்றையும் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து சில நாட்களில் அதே பகுதியில் அதே பாணியில் மேலும் ஒரு பைக் திருடு போயுள்ளது. இதனால் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்.
அப்போது திருடு நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அதில், ஆட்டோவில் வந்து சிலர் பைக்கை திருடிய காட்சி பதிவாகி இருந்துள்ளது. உடனே ஆட்டோ பதிவு எண்ணை வைத்து கரண்குமார் (21), அஜித்குமார் (23) மற்றும் கோடீஸ்வரன் (21) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் கண்ணகி நகரை சேர்ந்தவர்கள் என்பதும், தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தெரிவித்த போலீசார், பகலில் துரைப்பாக்கம் பகுதியில் உள்ள பைக்குகளை நோட்டமிட்டு, அதிகாலை 2 மணியளிவில் ஆட்டோவில் திருட சென்றுள்ளனர். திருடச் செல்லும்போது கையோடு ஹெல்மெட்டையும் உடன் எடுத்து செல்கின்றனர். பின்னர் திருடிய பைக்குகளில் சென்று செயின், செல்போன் பறிப்பு போனற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 1 லட்சத்துக்கும் மேல் உள்ள பைக்குகளை குறி வைத்து திருடியுள்ளனர். இந்த நிலையில் இவர்களிடமிருந்து ஆட்டோ மற்றும் பைக்குகளை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.