101 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு.. 5 வகை உணவு, சீர்வரிசைகள் என நெகிழ வைத்த மருத்துவ கல்லூரி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் 101 கர்ப்பிணி பெண்களுக்கு பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பு விழா நடைபெற்றிருக்கிறது. இது அப்பகுதி மக்களை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.
பொதுவாகவே இந்தியாவில் பெண்களுடைய வாழ்வில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் விழாவாகவே மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் வளைகாப்பு எனப்படும் நிகழ்வு முக்கியமானதாகவும் பார்க்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு நடத்தப்படும் இந்த விழாவில் கர்ப்பவதியாக இருக்கும் பெண் நல்ல முறையில் தனது குழந்தையை பெற்றடுக்க வேண்டும் என உறவினர்கள் வாழ்த்துவர். அப்போது, கர்ப்பிணியின் கன்னத்தில் சந்தனம் பூசியும் கைநிறைய வளையல் அணிவித்தும் மகிழ்வர். இது பொதுவாக புகுந்த வீட்டில் நடைபெறும் சடங்கு ஆகும். ஆனால், ரத்தினமங்கலத்தில் மருத்துவ கல்லூரியில் 101 பெண்களுக்கு வளைகாப்பு நடத்தி இருக்கிறார்கள் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தினர்.
வண்டலூர் அடுத்த ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ளது தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை. இங்கே சமீபத்தில் 101 கர்ப்பிணி பெண்களுக்கு பிரம்மாண்டமான முறையில் வளைகாப்பு விழா நடைபெற்றிருக்கிறது. இந்த விழாவை தாகூர் மருத்துவ குழுமத்துடைய தலைவர் டாக்டர்.மாலா அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து துவங்கி வைத்தார். இதில் கலந்துகொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சடங்குகள் நடத்தப்பட்டிருக்கிறது. சந்தனம், குங்குமம் துவங்கி சீர்வரிசை பொருட்கள் என வந்திருந்த அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் கொடுத்திருக்கிறது தாகூர் மருத்துவ கல்லூரி நிர்வாகம்.
தாகூர் மருத்துவக் கல்லூரியின் தலைவர் மாலா ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணுக்கும் முறை செய்து சீர்வரிசயை வழங்கினார். இந்த நிகழ்வில் தாகூர் மருத்துவ கல்லூரியின் செயலாளர் மணிகண்டன், காட்டாங்குளத்தூர் ஒன்றிய தலைவர் உதய கருணாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆகியோர் கலந்துகொண்டு கர்ப்பிணி பெண்களை வாழ்த்தியுள்ளனர்.
அதுமட்டும் அல்லாமல் தாகூர் மருத்துவ கல்லூரியின் பணியாளர்கள் மற்றும் கர்ப்பிணிகளின் உறவினர்களும் இந்த விழாவில் திரளாக கலந்துகொண்டனர். அப்போது 5 வகை உணவுகளுடன் கூடிய விருந்தும் நடைபெற்றிருக்கிறது. அதனுடன் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் சீமந்த சீர்வரிசை அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்