'துபாய் போகும்போது அம்மா கூட'... 'ஆனா திரும்பி வரும்போது'... 'கையெடுத்து கும்பிட்ட தந்தை'.... விமான நிலையத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்துபாயிலிருந்து 11 மாத குழந்தை விமானம் மூலம் அழைத்துவரப்பட்டு அவரது தந்தையிடம் சேர்க்கப்பட்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் வேலவன். இவரது மனைவி பாரதி. இந்த தம்பதிக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் இறந்துவிட்ட நிலையில், 2-வது மகனுக்கு 7 வயது ஆகிறது. 3-வது மகன் தேவேஷ் பிறந்து 11 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் இவர்களது குடும்பம் கடுமையான வறுமையில் சிக்கித் தவித்தது.
இதனால் வறுமை காரணமாகக் கடந்த 2 மாதங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து வேலைக்காக தேவேசை 9 மாத கைக்குழந்தையாகத் தூக்கிக்கொண்டு துபாய்க்குச் சென்றார். அங்கு வீட்டு வேலை செய்து வந்த பாரதி, கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருடைய உடல் துபாயில் அடக்கம் செய்யப்பட்டது.
இதனால் அவருடைய கைக்குழந்தை தேவேஷ் தாயின்றி தவித்து வந்தது. பாரதியின் தோழிகள் குழந்தையைப் பராமரித்து வந்தனர். இதற்கிடையே குழந்தையின் நிலை குறித்து துபாயில் வசிக்கும் துபாய் தி.மு.க. அமைப்பாளர் எஸ்.எஸ்.முகமது மீரானுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினைத் தொடர்பு கொண்டு நடந்த விவரங்களைக் கூறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த குழந்தையைத் தமிழகத்துக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மேற்கொண்டார். பின்னர், நேற்று துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த திருவாரூரைச் சேர்ந்த சதீஷ்குமாருடன் குழந்தை தேவேஷ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த விமானம் நேற்று திருச்சி வந்தடைந்ததும், விமான நிலையத்தில் காத்திருந்த குழந்தையின் தந்தை வேலனிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
அப்போது வேலன், தன்னுடைய மகனைப் பார்த்தவுடன் கட்டியணைத்து கண்ணீர் மல்கக் கொஞ்சினார். தேவேஷ் தன்னுடைய அப்பா மற்றும் அண்ணனைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். இந்த நிகழ்வு அங்கிருந்தவர்கள் கண்ணில் கண்ணீரை வர வைத்தது.
இதனிடையே தாயில்லாமல் தவித்த 11 மாத குழந்தையான தனது மகனைப் பத்திரமாகத் தமிழகம் அழைத்து வர உதவி புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வேலவன் உருக்கமுடன் நன்றி தெரிவித்தார். மேலும், கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி தனது குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுக ஏற்றுக்கொண்டு, பொருளாதார ரீதியாக உதவி புரிவதாக உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் தாயை இழந்து தவித்த குழந்தையை, பாரதியின் தோழிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் பத்திரமாக பார்த்துக் கொண்டதற்கும் அவர் நன்றி கூறினார்.
மற்ற செய்திகள்