பல கோடிக்கு ஏலம்போக இருந்த நடராஜர் சிலை.. ஒரே ட்வீட்டால் தடுத்த தமிழக போலீஸ்.. பரபர பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் அமைந்திருக்கிறது ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வரர் திருக்கோயில். இந்த கோவில் கடந்த 15,16 ஆம் நூற்றாண்டின் போது அப்பகுதியில் குறுநில மன்னராக இருந்த வெட்டும் பெருமாள் ராஜா என்பவரால் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் இந்த கோயிலுக்குள் ஐம்பொன்னால் ஆன பல சிற்பங்கள் இருந்ததாகவும் தெரிகிறது. அப்படி ஒரு சூழலில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான பல சிற்பங்கள் காலப்போக்கில் காணாமல் போய்விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
அப்படித்தான் கடந்த 1972 ஆம் ஆண்டு நடராஜர் சிலை ஒன்று திருடப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் இந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கு தொடர்பாக கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சிலை காணாமல் போய் சுமார் 50 ஆண்டுகள் ஆகியும் இந்த நடராஜர் சிலையை யார் திருடினார்கள் என்பதை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தான், ஸ்ரீ கோதண்ட ராமேஸ்வரர் திருக்கோயில் இருந்த நடராஜர் சிலை போலவே பிரான்ஸ் நாட்டின் Christies வெப்சைட் மூலம் சிலை ஒன்று ஏலம் விடப்படுவது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தோ பிரெஞ்சு நிறுவனத்திடம் உள்ள பழைய புகைப்படங்களுடன் இந்த நடராஜன் சிலையின் புகைப்படத்தையும் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஒப்பிட்டு பார்த்துள்ளனர். அப்போது அவர்கள் எதிர்பார்த்தது போலவே இந்த இரண்டு படங்களும் ஒத்துப்போனதாக தெரிகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போன நடராஜர் சிலை தான் அது என்பது உறுதியாகியுள்ளது.
உடனடியாக இது தொடர்பாக மாநில அரசுக்கும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலம் இந்த விஷயம் சம்பந்தப்பட்ட ஏல நிறுவனத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. அதுமட்டுமில்லாமல் பிரான்சில் உள்ள இந்திய தூதரத்தின் மூலமாக இது தொடர்பான வழக்கு பதிவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் இந்த ஏலத்தை நிறுத்தப்படுவது குறித்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை என தெரிகிறது.
இதன் பின்னர் தான் கடைசியாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை தலைவர் ஜெயந்த் முரளி இது தொடர்பாக ஏல நிறுவனத்தை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். அதன் பிறகு தான் ஏலம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக முரளி செய்திருந்த ட்வீட்டில், "நடராஜர் சிலையை ஏலம் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். சிலையை திருப்பிக் கொடுத்து விடுங்கள். அது இந்தியாவில் இருந்து திருடப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து Christies தளம், இந்திய தூதரகத்திடம் ஏலத்தை நிறுத்துவதாகவும் இந்த சிலையை ஏலத்திற்கு கொண்டு வந்தவர்கள் குறித்த விவரங்களை சேகரித்து தருவதாகவும் கூறியுள்ளது. ஒருவேளை இது தமிழ்நாடு போலீசார் கவனத்தில் வராமல் விடப்பட்டிருந்தால் இந்த சிலை குறைந்தபட்சம் ரூ.1.76 கோடி முதல் ரூ.2.64 கோடி வரை விலை போய் இருக்கும் என்றும் சிலை தடுப்பு காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை அதிகாரி ஜெயந்த் முரளி பேசுகையில், " ஏலத்தில் விடப்படும் பழங்கால பொருட்கள் திருடப்பட்டு இருப்பின் அதனை உரிமை கோரும் நாட்டிடம் ஒப்படைக்க வேண்டும் என்று யுனெஸ்கோ பரம்பரிய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த ஒப்பந்தத்தின் படி இந்த சிலை இந்தியாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இச்சிலையை ஏலத்தில் விட்டவர்களை கண்டுபிடிப்பது என்பது கடினமான பணியாகும்" என்றும் கூறியுள்ளார்.
சர்வதேச சந்தையில் ஏலத்தில் விடப்பட இருந்த பழங்கால சிலை விற்கப்படாமல் தடுக்கப்பட்டதையடுத்து தமிழக காவல்துறையினருக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
மற்ற செய்திகள்